நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள் சீனா வழங்கியுள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓரங்கமாக இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இலங்கைக்கான சீன தூதர் செங் ஜுய்யுவான் இந்த வாகனங்களை கையளித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் குறித்த வாகனங்கள் தமக்கு உதவும் என தெரிவித்த ஜனாதிபதி சரியான நேரத்தில் உதவுவதற்காக சீனாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு இலங்கை பொலிஸார் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்த சீன தூதர், இலங்கையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.