(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் உள்ளிட்ட மூவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில் கஞ்சிபானை இம்ரான் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நீதிவான் இட்ட கட்டளைக்கு அமைய அவர் மேற்பார்வைக்காக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.  

அத்துடன் இம்ரானுடன் சேர்த்து சி.சி.டி. தடுப்பில் உள்ள புள்ளப்பழம் அஜ்மி எனப்படும் மொஹம்மட் அஜ்மி மற்றும் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் ஆகிய இம்ரானின் இரு சகாக்களும் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். 

இதன்போது கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

இந் நிலையில் குறித்த மூவரையும் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி மன்றில் ஆஜர்செய்யுமாறு நீதிவான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.