(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம். வசீம்)

 சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும் அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும் அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர் கைதாகியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இன்னும் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. 

இத்தகைய மத அடிப்படைவாதிகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை முஸ்லிம் மக்கள் தரப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவே அம் மக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. அப்போதே இது தொடர்பில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் பல அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன் 

அப்போது அதனைக் கைவிட்டு விட்டு தற்போது பல உயிர்கள் பலியானதன் பின்னர் சோதனைகள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

தற்போது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுகின்ற மக்களிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகளிலிருந்து காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி நச்சரித்து வருவதாகவும் அவர்களது அச்சுறுத்தல்கள் தாங்காத நிலையில் பலர் பணம் கொடுத்து வருவதாகவும் பலரும் முறையிட்டு வருகின்றனர். 

இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்த்து அதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.