ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து ‘பிளேஒப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த தொடரில் எழுச்சி பெற்றுள்ளது. 

அத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அணி முதல்முறையாக பிளேஒப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4 ஆவது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4 ஆவது இடம் பிடித்து ‘பிளேஒப்’ சுற்றுக்குள் நுழைந்ததுள்ளது.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 

இந்த தொடரில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2 ஆவது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோத வேண்டும். 

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதுடன் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.