(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல பாதாள உலக தலைவனும் போதைப்பொருள் கடத்தல் மன்னருமான மாகந்துரே மதூஷிடம் சி.ஐ.டி. தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், மாகந்துரே மதூஷுக்கு உள்ள தொடர்பு குறித்து உடன் விசாரணைகளை நடத்த கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, மாகந்துரே மதூஷ் சி.ஐ.டி. யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவரிடம் இன்னும் ஜனாதிபதி கொலை சதி விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என குற்றப் புலனயவுப் பிரிவின் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து அது தொடர்பில் உடன் அவதானம் செலுத்த உத்தரவிட்ட நீதிவான் அந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.ஐ.டி.க்கு நீதிவான் உத்தர்விட்டார்.