12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஒன்றையொன்று எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 7.30 க்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாவுள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்ததுடன் முதல் அணியாக பிளேஒப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆவது முறையாக இறுதிசுற்றை எட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் 9 வெற்றி, 5 தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ஓட்ட வீதத்தில் அந்த அணி சென்னையை விட கொஞ்சம் மேலோங்கி நிற்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி உடனடியாக வெளியேறாமல் இன்னொர் வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2 ஆவது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக இடம்பெற்ற இரு போட்டிகளிலும் சென்னை அணி 37 மற்றும் 46 ஓட்டங்களினால் தோல்விடையந்துள்ளது. அது மாத்திரமன்றி ஐ.பி.எல். அரங்கில் மும்பைக்கு எதிராக 26 போட்டிகளில் விளையாடிய 15 இல் தோல்வியை சென்னை அணி சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.