(ஆர்.விதுஷா)

தனிப்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாகவே யாழ்ப்பாண கல்லுரி அதிபருக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, யாழ். மவட்டம் முஹம்மது உமர் ரியாஸ்  யாழ்பாணம் கல்லூரி அதிபருக்கு அச்சுறுத்தல் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில், கல்லூரி அதிபர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபர்  தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது அந்த நபர் இத்தகைய கடிதத்தை அனுப்பிவைக்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையிலான தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக குறித்த நபருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறானதொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அச்சுறுத்தல் கடிதத்தை அனுப்பிய சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.