உலக அளவில் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

 உலக அளவில் ஆறு வினாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் உயிரிழக்கிறார் என்றும், ஆண்டுதோறும் புதிதாக 17 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இதில் 6 மில்லியன் மக்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் பக்கவாதத்தால் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.

இன்றைய திகதியில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றிக் கொண்டதால் பக்கவாதத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், தூக்கமின்மை காரணங்களால் இளைஞர்கள் அதிக அளவில் இத்தனை பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது குழாய்கள் வீக்கம் அடைந்து சேதமடைந்தாலும் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் அடைப்பு காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை முழுமையாக குணப்படுத்த இயலும். ஆனால் உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சைகளையும், மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு இருப்பது போல், திடீரென்று ஒரு கையோ அல்லது  ஒரு காலோ சரிவர செயல்படாமல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக எம்மில் பலரும் மருத்துவமனைக்கு செல்வதில்லை. சிறிது நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகே மருத்துவமனையை நாடுகிறார்கள். 

இது முற்றிலும் தவறு.பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்துகளின் மூலமாகவே அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். சிலருக்கு பக்கவாதம் ஏற்பட்டு எட்டு மணி நேரத்திற்குள் வைத்தியசாலைக்கு சென்றால், அங்கு அவர்களுக்கு ஒஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மூலம் இந்தப் இத்தகைய பாதிப்பபைச் சீராக்குவார்கள். ஆனால் இது குறித்த முழுமையான விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை. எனவே பக்கவாத பாதிப்பின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்றால், அதனை குணப்படுத்தலாம்.

டொக்டர் சைமன்.

தொகுப்பு அனுஷா.