ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை உயர்த்தி அரசியல் இலாபம் பெறும்  நடவடிக்கைகளுக்கு நாட்டில்  தடை விதிக்க  வேண்டும் என நேற்று சபையில் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.

கடந்த கால ஆட்சியிலேயே துறைமுக நகரத் திட்டம்,  அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட அரச சொத்துக்களை வெளிநாட்டு தனியார் கம்பனிகளுக்கு  “சொந்தமாக வழங்கப்பட்டது” என்றும்  அமைச்சர் குற்றம் சாட்டினார். 
 பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே துறைமுகங்கள்,  கப்பற்துறை அமைச்சர்  அர்ஜுன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்  தமது இனம், மதத்தை பாதுகாப்பதற்கு  முன்னுரிமை வழங்குவதை  நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு இனத்தை அழித்து இன்னொரு  இனத்தை உயர்த்தி அரசியல் குளிர்காய்வதையே எதிர்க்கின்றேன். 
 இவ்வாறான அரசியலுக்கு நாட்டில் தடை விதிக்கப்படவேண்டும். 
விடுதலைப் புலி சந்தேக நபர்களை எமது அரசு நிபந்தனையுடன் பிணையிலேயே விடுதலை செய்தது. ஆனால் விடுதலையையும் பிணையில் விடுதலை செய்யப்படுவதையும் பிரித்தறிய முடியாது. இனவாதிகள் இதனை பயன்படுத்தி  நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர். 
இந்த அரசு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியே அனைத்தையும் முன்னெடுக்கின்றது. 
எமது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மூலம் அரச வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சிலர்  குற்றம்  சாட்டுகின்றனர். 
ஆனால் கடந்த ஆட்சியில் துறைமுக நகரத்தில் மூன்றில் ஒன்று  தனியாருக்கு சொந்தமாக வழங்கப்பட்டது. அத்தோடு அத்திட்டத்தில்  பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. எனவே தான் அதனை இடைநிறுத்தியுள்ளோம். 
அதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகம் 35 வருட காலத்திற்கு தனியாருக்கு  சொந்தமாக   வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது இதனை மீளப்பெற்றுக்கொள்வதற்காக  நாம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். 
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின்  வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கலாம்.  அடிப்படை வசதிகளை வழங்கவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இலங்கையின் பொருளாதாரத்திற்கு   பாரிய பங்களிப்பை வழங்கும்  இம்மக்கள்  தொடர்பில் கடந்த காலங்களில் எவரும்  கவனம் செலுத்தவில்லை. 
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசில் இம்மக்களுக்கு  7 பர்ச்சஸ் காணி  வழங்கப்படுகிறது.  அம்மக்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.