ஐ.பி.எல். தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நாளையதினம் பிளேஒப் சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

8 அணிகள் கலந்துகொண்ட 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வெளியேறிய நிலையில், பிளேஒப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நுழைந்தன.

இந் நிலையில் நேற்று இரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற 56 ஆவது லீக் போட்டி முக்கியமானதொரு ஆட்டமாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம்தான் பிளேஒப் சுற்றுக்கு நுழையப் போகும் நான்காவது அணி எது என்ற கேள்வி இருந்தது.

இப் போட்டியில் ஏற்கனேவ பிளேஒப் சுற்றுக்கு நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், பிளேஒப் சுற்றுக்கு நுழைவதற்கான கனவுடன் கொல்கத்தா அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடின. இப் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர்கள் சொதப்பிய காரணத்தினால் மும்பை அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும் ஓட்ட வீதத்தில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் அதிர்ஷ்டவசமாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) நான்காவது அணியாக ‘பிளேஒப்’ சுற்றுக்குள் நுழைந்தது. 

ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8 ஆவது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும்.

அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ், ஐதராபாத்  ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளேஒப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னை - மும்பை

நாளைய தினம் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள பிளேஒப் சுற்றின் முதலாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

டெல்லி - ஐதராபாத்

எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் பிளேஒப் சுற்றின் இரண்டாவது போட்டியில் மூன்றாவது, நான்காவது இடங்களை பெற்ற டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். வெற்றி அடையும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 10 ஆம் திகதி சந்திக்கும். 

அத்துடன் இறுதிப் போட்டி 12 ஆம் திகதி ஐதராபாத்தில் இடம்பெறவுள்ளது.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்