(ஆர்.யசி)

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கத்துடன் எந்தவொரு பேச்சுவார்த்தையுமின்றி பாராளுமன்றத்தில்  எதிர்க்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன்போது முன்னாள் பாதுகாப்பு அதிகரிகள் தயாரித்த நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த அறிக்கையை ஜனாதிபதி பெற்றுக்கொண்ட நிலையில் புதிதாக கொண்டுவர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே எதிர்க்கட்சி தலைவர் இந்தக் காரணிகளை முன்வைத்துள்ளார். 

நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் அரசாங்கம் தற்போது எடுத்துள்ள நகர்வுகள் ஆரோக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அரசாங்கம் எடுத்துள்ள பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னேற்றமானது. எனினும் சம்பவங்களை தடுக்க  கால தாமதம் ஏற்பட்டதை எங்களால்  நிராகரிக்க முடியாது. அத்துடன் இன்னமும்  அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் முக்கியமான நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்தும் திருப்தியடைய முடியும். ஆனால் தொடர்ந்தும் அரசாங்கம்  தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் இனியும் இருக்கக் கூடாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போ கேட்டுக் கொண்டார்.