தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை நகரில் செலான் வங்கிக்கு பின்புறமாக அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது சுமார் 50 அடி உயரமான மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இச்சம்பவமானது இன்று (05.05.2019) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.  

இந்நிலையில், உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மண்ணில் புதையுண்ட நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் அவசர  சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.