கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு மத்தியில், இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் தங்கயிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வாழ்விடம் இல்லாது பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

160 இற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் கடந்த மாதம்  24  ஆம் திகதி  நீரகொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரினர்.  ஐக்கிய நாடுகள் முகவர் ஆணையத்தின் மூலம் இவர்கள்  இலங்கையில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டவர்களாவர்.

இவர்களில் 60 இற்கும் மேற்பட்டவர்கள் கத்தோலிக்கம் மற்றும் கிறிஸ்தவர்களாவர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் சுன்னி முஸ்லிம்களும் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நகரில் உள்ள வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்த இவர்களை அசம்பாவிதங்களை அடுத்து வீட்டுரிமையாளர்கள் தமது வீடுகளிலிருந்து செல்லுமாறு கூறினர். 

இதனை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை சில இடங்களில் தங்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்தபோதும், அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை காரணமாக மழை மற்றும் வெயிலில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். பொலிஸ் நிலையத்தில் உள்ள மூன்று மலசலகூடங்களையும் இரண்டு குளியலரைகளையுமே சகலரும் பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  

சிறுவர்கள் உட்பட பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இவர்கள்,  தம்மை பாதுகாப்பான இடமொன்றில்  விரைவில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.