ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். போட்டியின் 54 ஆவது லீக் ஆட்டம் பெங்ளூரு ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நேற்று இரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 175 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணியில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மாத்திரம் அதிகபடியாக 70 ஓட்டங்களை குவித்தார்.

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்த நிலையில் 178 ஓட்டங்கள‍ை குவித்து, வெற்றியிலக்கை கடந்தது.

பெங்களூரு அணி சார்பில் சிம்ரன் ஹெட்மேயர் 75 ஓட்டங்களையும், குர்கீரத் சிங் மன் 65 ஓட்டங்களையும் அதிபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் கலில் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பினை இழந்து, வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்