நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னுரிமை அளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுப்பு நாடுகளின் அதிகாரமும்  பணபலமும் அன்றி பொதுவான பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.


மோல்டாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளாதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


பொதுநலவாய அமைப்பின் விலகிச் செல்லும் தலைவர் என்ற வகையில் உங்கள் மத்தியில் இச் சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொதுநலவாய அமைப்பின் தலைவராகவும், பொதுநலவாய அமைப்பின் ஒரு பெருந் தலைவியாக நாம் மதிக்கும் மாண்புமிகு எலிசபத் ராணியார் இந்த நிகழ்வில் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கை பொதுநலவாய அமைப்பின் ஒரு ஸ்தாப உறுப்பினர் என்பதோடு, கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் வளர்ச்சி குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பொதுநலவாய அமைப்பின் செல்வாக்கு எமது எல்லா உறுப்பு நாடுகளினதும் அரசியல் மற்றும் சமூக நடத்தையை வழிகாட்டுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. உறுப்பு நாடுகளின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அன்றி பொதுப் பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் இலங்கையில் சந்தித்தபோது சமத்துவ மற்றும் உள்ளீர்ப்பு என்பவற்றுடனான வளர்ச்சியை அடைந்து கொள்வதே பொதுநலவாய நாடுகளின் பிரதான கரிசனைக்குரிய அம்சமாக இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொண்டோம்.


நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவது தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை வேண்டி நிற்கிறது என்பதையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் முன்னுரைமை அளித்து இருப்பதை குறிப்பிடுவதில் நான் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன். 


இன்றைய இளம் தலைமுறை ஒரு சுபீட்சமான நாளைக்கான அடித்தளமாவர் என்பதை நாம் ஏற்றுக் கொண்டோம். இளைஞர் தலைமுறைக்கான அர்ப்பணத்தின் மாகம்புற பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் எமது இளம் தலைமுறைக்கான எமது ஆர்வத்தை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். பொதுநலவாய இளைஞர் பேரவை தாபிக்கப்பட்டதை நாம் வரவேற்பதோடு, முதலாவது பொதுநலவாய இளைஞர் பேரவை மாநாட்டை நடாத்துவதற்கு உபசரிப்பு நாடாக இருந்ததையிட்டு இலங்கை மகிழ்ச்சியடைகின்றது.


பொதுநலவாய அமைப்பின் 2 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சனத்தொகையைக் கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற மற்றும் குறைந்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவது எமது குறுங்கா, இடைக்கால மற்றும் நீண்டகால இலக்காகும்.


தொழில்வாய்ப்புக்களை உறுவாக்குவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் பொருளாதார சுபீட்சத்தை மேம்படுத்துவதிலும் வர்த்தகமும் முதலீடும் ஒரு முக்கிய பங்ககை வகிக்கின்றதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது நாடுகளின் மூலம்  மூலப் பொருட்களை விற்பனைச் செய்வதற்கு பதிலாக பெறுமதிசேர் கைத்தொழில் துறைக்கான ஒத்துழைப்பு கூடிய கவனத்தைபெற வேண்டும்.


கொழும்பு உச்சி மாநாட்டின்போது நாம் வெ ளியிட்ட கோட்டே அறிக்கை பொதுநலவாய முதலீடு மற்றும் தனியார்துறை ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணத்தை வலியுறுத்துகின்றது. இது எமது அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டு நண்பர்கள் மற்றும் அவர்களது பொருளாதாரங்களின் கேள்வியாகும்.


வெ ளிச் செல்லும் தலைவர் என்ற வகையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் நாம் மேற்கொண்டுள்ள பணிகளை பின்நோக்கிப் பார்க்கின்றபோது, நாம் திருப்தியடைந்திருக்கின்றோம். நான் இப் பதவியில் இருந்தபோது எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு எல்லா பொதுநலவாய அரச தலைவர்களுக்கும் எனது நன்றிகளை நினைவுகூர்கின்றேன்.


பொதுநலவாய அமைப்புக்கு தனிப்பட்ட முறையில் எனக்கும் எனது நாட்டுக்கும் இலங்கை மக்களுக்கும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவரது பணிக்குழாமினரும் வழங்கிய பங்களிப்புகளை நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.


இறுதியாக, இந்த மாநாட்டின் உபசரிப்பு நாடாக இருக்கின்ற அதேநேரம் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்புக்கு தலைமை வகிக்கவுள்ள மோல்டா நாட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டை சிறப்பான முறையில்  ஒழுங்க செய்திருப்பதற்காக மோல்டா நாட்டின் பிரதமருக்கும் மோல்டா நாட்டின் மக்களுக்கும் எனது நன்றிகளையும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.