- எம்.டி.லூசியஸ்
''அப்பா எங்களை செல்லப்பிள்ளைகளாகவே வளர்த்து வந்தார். அவருடைய உழைப்பிலேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்பட்டார். "நீங்கள் ஒருபோதும் தொழில் செய்யத் தேவையில்லை. குடும்பத்துக்கு எனது உழைப்பு மாத்திரம் போதும். நீங்கள் புதிய விடயங்களைக் கற்று உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்" என அடிக்கடி கூறுவார். ஆனால் இன்று ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இருக்கின்றோம். எங்களை காத்துவந்த தெய்வம் எங்களை விட்டுப் பிரிந்து விட்டது என பெற்றோரை இழந்த ரொசிக்கா கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார்.
ஆம். ரொசிக்காவைப் போன்று எண்ணிலடங்காத பலர் இன்று நமது தேசத்தில் வீட்டுக்குள்ளேயே புலம்பி அழுது கொண்டிருக்கின்றனர்.
கடந்த மாதம் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் சோக விளைவுகளே இவை.
9 தற்கொலைத் தாக்குதல்கள்
வழமை போன்று சந்தோஷமாகவும் ஆர்ப்பரிப்புடனும் இயங்கிய இலங்கைத் தீவு அன்று 21ஆம் திகதி காலை 8.45 மணிக்குப் பின்னர் ஆட்டம் கண்டு போனது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் அனைத்து இன மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 என பொலிஸ் மற்றும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அந்தத் தகவல்கள் தவறானவை எனவும் 253 பேரே இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் 400க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ---விசேட வைத்திய அதிகாரி அனில் ஜயசிங்க தெரிவித்திருந்தார்.
அதிக உயிர்கள் காவுகொள்ளப்பட்ட கட்டுவபிட்டி
நீர்கொழும்பு கட்டுவபிட்டி ஆலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னும் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். பலர் ஊனமடைந்துள்ளனர்.
கேசரி குழுவினர் விஜயம்
நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பகுதிக்கு கேசரிக் குழுவினரான நாம் கடந்த செவ்வாய்க்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். தாக்குதலின் பின்னர் அங்குள்ள தற்போதைய கள நிலைமைகளை ஆராய்ந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருந்தோம்.
முழத்துக்கு முழம் மரண வீடுகள்
கட்டுவபிட்டி பகுதிக்கு வாகனத்தில் சென்று வீதியில் இறங்கினோம். பிரதேசம் எங்கும் இனம் புரியாத ஓர் அமைதி. வீதியில் மக்களின் நடமாட்டம் இருக்கவில்லை. வீதிகள்தோறும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
வீதியில் நடந்து செலும் போது வீடுகள் தனித்தே காணப்படுகின்றன. ஒவ்வொரு முழத்துக்கு முழம் மரண வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இருவர் அல்லது மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என வீட்டின் சுவர் மதில்களில் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மரண வீடு என்பது எப்போதாவது ஒரு வீட்டில் பதிவாகும் சம்பவம். ஆனால் ஒரு கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் மரண வீடுகள் இருந்ததை சிறிதும் நினைத்து பார்க்க முடியவில்லை. அதுவும் ஒரு வீட்டில் பலர் பலியான சோகம்.
இவற்றைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம்.
வீட்டின் முற்றத்தில் ஆழ்ந்த யோசனையுடன் பெண்ணொருவர் அமர்ந்திருந்தார். இடது காலில் பாரிய கட்டு ஒன்று போடப்பட்டிருந்தது. வலது கால் மற்றும் கைகளிலும் சிறு கட்டுகள் போடப்பட்டிருந்தன. நாம் அவரை அணுகிய போதும் நாம் வந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. அருகில் சென்று "அக்கா..!" என அழைத்த பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு எம்மைப் பார்த்தார்.
அவருடைய முகத்தில் பாரிய சோகங்கள் பிரதிபலித்தன.
ஒருவேளை உணவுக்கே கையேந்தும் நிலைமை
எம்மை அறிமுகம் செய்த பின்னர் எம்மோடு கதைக்க ஆரம்பித்தார் 44 வயதுடைய தினிசா,
கட்டுவபிட்டி தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எனது 70 வயது தாயும் 8 மாத மகளும் உயிரிழந்து விட்டார்கள். எனது ஒரு கால் முற்றாகப் பதிக்கப்பட்டுள்ளது. எனது 7 மற்றும் 5 வயதுடைய இரு மகள்மார் காயமடைந்துள்ள நிலையில் 5 வயதான மகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
ஆலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது நாம் ஆலயத்தின் நடுப்பகுதியிலேயே அமர்ந்திருந்தோம். தாக்குதலில் எனது மகளுக்கு நெஞ்சுப் பகுதியில் குண்டின் சன்னம் பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரு வாரங்கள் கடந்துள்ளன. எமது வீட்டின் பொருளாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் உதவி செய்வதாகக் கூறினாலும்கூட உயிரிழந்தவர்களின் சடலங்களை யும் 65 ஆயிரம் ரூபா பணம் கொடுத்தே பெற்றுக்கொண்டோம். இதனால் நாம் பெரும் கலக்கமடைந்தோம். இதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. இந்தப் பணம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதா அல்லது ஆலயக் குருவானவரால் வழங்கப்பட்டதா என்று தெரியவில்லை.
உயிரிழந்தவர்களைப் புதைக்கும் நேரமே குறித்த ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. எனது கணவர் வெளிநாட்டுக்குச் சென்று இரு மாதங்களே ஆன நிலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில் எனது கணவர் மறுநாள் திங்கட்கிழமை நாடு திரும்பி விட்டார். இதனால் எனது குடும்பத்துக்கான வருமானம் அனைத் தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
நாம் உரையாடிக்கொண்டிருந்போது தினிசாவுக்கு கிராம சேவகரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
"அப்பாவின் மரணச் சான்றிதழா......? ஐயோ அம்மா தான் அதனை வைத்திருந்தார். அவருக்குத் தான் தெரியும். அது எங்கிருக்கின்றதென்று தெரியவில்லையே. 36 வருடங்கள் கடந்துவிட்டதே.... அப்பாவின் மரணச்சான்றிதழை எடுத்துக்கொண்டு அம்மா கச்சேரிக்கும் சென்று வந்தார். எப்படியாவது நான் அப்பாவின் மரணச் சான்றிதழைத் தேடித்தருகின்றேன்" என தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இதன்போது அவரின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கீழே விழுந்தன. குடும்பத் தலைவியாகவும் ஓர் அன்னையாகவும் இருந்த பெண்ணின் வெற்றிடத்தை அந்த இடத்தில் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. மீண்டும் அவர் எம்முடன் உரையாடத் தொடங்கினார்.
"பாருங்கள் ஒரு தாயின் மகிமை எவ்வளவு அளப்பரியது. வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் அம்மாவிடமே கேட்டுப் பெற்றுக் கொள்வோம். ஆனால் இன்று...?" தேம்பி அழுகின்றார்.
''இந்தத் துக்கத்திலிருந்து மீள முடியுமா எனத் தெரியவில்லை.
8 மாதக்குழந்தையைப் பிரிந்தமை பெரும் மன உளைச்சலையும் வேதனையையும் இனம்புரியாத கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொழில் துறை, உறவுகளை இழந்து தற்போது நிர்க்கதியாகியுள்ளோம் ஒருவேளை உணவுக்குக்கூட பிறரிடம் கையேந்தும் நிலையேற்பட்டுள்ளது.
இதற்கு யார் பொறுப்பு...-? நாங்கள் செய்த தவறா...? இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்... ஒன்று விட்ட ஒரு நாள் மருந்து கட்டவென வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அது மாத்திரமின்றி எமது உறவினர்களும் இங்கு தான் உள்ளனர். அவர்களோ தங்களது தொழில் துறைகளை விட்டுவிட்டு எமக்கு ஆதரவு வழங்குவதற்காக எம்முடன் இருக்கின்றனர். அனைவரின் வருமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாக ஆலயங்களில் இருந்தும் விகாரைகளிலிருந்தும் உணவுகள் வழங்கப்பட்டன. எமக்கு அயலவர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களும் இதே நிலையில் தான் உள்ளனர். அவர்களின் உறவுகளும் பறிபோயுள்ளன.
எதிர்காலம் என்ற ஒன்றில் நம்பிக்கையில்லாது போய்விட்டது. ஆலயத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் தான் என் கண் முன்னே வந்து செல்கின்றது. உணவு உண்பதற்கே மனமில்லாது போயுள்ளது.
அரசாங்கம் நஷ்ட ஈடு தருவதாகக் கூறியுள்ளது. 5 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கடந்து தருவதால் பயனில்லை. எமது பொருளாதாரம் தடைப்பட்டுள்ள இந்த நேரத்தில் அது கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? அழுகிறது அந்தத் தாயுள்ளம்....!
பின்னர் அவரை ஆறுதல்படுத்தி விட்டு அங்கிருந்து அருகில் இருந்த அடுத்த வீட்டுக்குள் சென்றோம்.
அங்கு வீட்டு முற்றத்தில் ஆங்காங்கே பல வெற்றுக் கதிரைகள் காணப்பட்டன. கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒருவர் "இந்த வீட்டில் நேற்றுத்தான் இறுதி மரணச் சடங்கு இடம்பெற்றது" என்றார்.
வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த 44 வயதுடைய துலானி என்ற பெண் எம்மோடு உரையாடத் தொடங்கினார்.
மரண ஓலங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
''அம்மா எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார். ஐயோ இந்த அரசாங்கம் ஏன் இப்படிச் செய்துவிட்டது'' இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோட அவரின் முகத்தில் கடும் கோபம் வெளிப்பட்டது.
"எனது அம்மா இறப்பதற்கு முன் 3 செபங்கள் அடங்கிய புனித செபஸ்தியாரின் படங்களை அச்சிட்டு அவரின் பிள்ளைகளாகிய எம் மூவரிடமும் வழங்கினார். அவரே உருவாக்கிய செபம் அது.
அதாவது எனது பிள்ளைகளும் அயலவர் சமூகமும் எவ்வித துன்பங்களுமின்றி வாழவேண்டும் என அந்தச் செபத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒருவேளை அம்மாவை மரணம் நெருங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அம்மாவை இந்த அரசாங்கம் கொலை செய்து விட்டது...." கதறி அழுகின்றார்.... சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கின்றனர்.
''எம்மைச் சுற்றியிருந்த அயலவர்களில் அரைவாசிப் பேர் பலியாகி விட்டனர். இதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்'' கடும் கோபத்துடன் தெரிவித்தார். "இந்தக் கிராமத்துக்கே அரசாங்கம் பாவம் செய்துவிட்டது. இந்த அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருந்தும் ஏன் எம்மைப் பாதுகாக்கவில்லை? நாம் யாருக்கு எந்தத் தீங்கிழைத்தோம்-? நாங்கள் கஷ்டப் பட்டு உழைத்து சந்தோஷமாக வாழ்ந்துவந்தோம்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து கிராமத்தவர்களில் பலர் தொழில் செய்ய முடியாதுள்ளனர். உடலில் ஒவ்வொரு அங்கவீனத்துடன் காயப்பட்டுள்ளனர். ஐயோ..... ஏன் இந்த நிலைமை" எனக் கதறி அழுதது எமது இதயத்தைக் கனக்கச் செய்தது.
"எனக்கு சகோதரியும் சகோதரனும் இருக்கின்றார்கள். எனது கணவர் சுற்றுலாத்துறையுடன் இணைந்த தொழிலொன்றையே புரிந்து வந்தார். சுற்றுலாத்துறை தற்போது வீழ்ச்சிகண்டுள்ளது.
இதனால் எமது குடும்பமும் வருமானமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எனது கணவருக்கு குண்டின் சன்னங்கள் உடலில் துளைத்துள்ளதால் இரத்த ஓட்டச் செயற்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையகற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து நேருமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பலருக்கும் நேர்ந்துள்ளது.
பக்கத்து வீட்டில் இருக்கும் தொழில் புரியும் பெண்ணொருவரின் கையும் உடைந்துள்ளது. தலையில் குண்டுச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அவரது தொழில் செய்த மகளும் உயிரிழந்துள்ளார். அவர் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டு நடத்தப்போகின்றார்-?
மற்றுமொரு வீட்டில் கணவனும் மனைவியும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மனைவி கோமா நிலைக்குச் சென்றுள்ளார். கணவன் படுகாயமடைந்துள்ளார். குண்டுச் சன்னங்களை உடலிலிருந்து அகற்ற முடியாது. பல துகள்கள் உள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டும். ஒரு வேளை உணவே கேள்விக்குறியாகியுள்ளது.
சுயமாக தொழில் செய்து சந்தோஷமாக வாழந்து வந்தவர்கள் நாங்கள். இன்று மற்றவர்களிடம் கையேந்தும் நிலையேற்பட்டுள்ளது. சமைத்து உண்பதற்குக்கூட வழியில்லை. மனமும் இடம் கொடுக்க மறுக்கின்றது.
எனது கணவர் படுக்கையிலேயே இருக்கின்றார். அவரால் எழுந்து நடந்து செல்லக்கூட முடியவில்லை.
மனிதர்களிடையே காணப்படும் இரக்கம், ஒற்றுமை இந்த அரசியல்வாதிகளிடமில்லை. அசம்பாவிதம் இடம்பெறப் போகின்றது என அரசாங்கம் அறிந்தும் பாதுகாக்கவில்லை. சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களும் வாழ வழியின்றி இருக்கின்றோம்.
தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று நோயாளர் ஆக்கப்பட்டுள்ளனர். நாளை, நாளை மறுதினம், அடுத்த வாரம் என ஐந்து நாட்களென மரணத்தறுவாயில் இருக்கின்றனர்.
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றபோது நான் ஆலயத்துக்கு வெளிப்பகுதியிலேயே இருந்தேன். அம்மா உள்ளே அமர்ந்திருந்தார். அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தமையால் அம்மாவுக்கு மாத்திரமே இருக்கை கிடைத்தது.
யுத்தத்தின் கொடூரத்தை நாம் தொலைக்காட்சிகளில் தான் பார்த்துள்ளோம். ஆனால் அன்று நாம் யுத்தத்தை நேரில் பார்த்த போது சொல்ல வார்த்தைகள் இல்லை. அன்றைய தினம் ஆலயத்தில் ஒலித்த ஐயோ..ஐயோ என்ற அவலக்குரல்களும் அலறல்களும் என்காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. சிலர் என்னைக் காப்பாற்றுங்கள் என கையை நீட்டி இரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடியதை விபரிக்க வார்த்ததைகள் இல்லலை... ஒரு கணம் மூச்சை உள்வாங்குகின்றார்.
''இரத்தத்தைப் பார்த்தாலே எனக்கு பயம் பற்றிக்கொள்ளும். அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர் ''உங்கள் அம்மா இறந்து கிடக்கின்றார் தூக்குங்கள் என்று, அம்மா மரணித்து சுவருடன் சாய்து'' கிடக்கின்றார்.
கதறி அழுகின்றார் "அம்மா எங்களைவிட்டுப் பிரிந்து விட்டீர்களே.... இனி நாங்கள் எப்படி அம்மாவின்றி வாழப்போகின்றோம்....?" நாம் அவர்களை ஆறுதல் படுத்தினோம்.
மீண்டும் விம்மியபடி தளர்ந்த குரலில் பேசத் தொடங்கினார்.
"நித்திரைக்குப் போகும் போதும் காயமடைந்தவர்களும் இறந்தவர்களுமே கண்களுக்குள் வருகின்றனர்" என்றார்.
அவருக்கு ஆறுதல் கூறி விட்டு அடுத்திருந்த வீட்டுக்குச் சென்றோம்.
அநாதையாகியுள்ள 3 சிறுவர்கள்
அங்கு தாயையும் தந்தையைம் இழந்து ஓர் இருட்டான அறையில் 3 சகோதரர்கள் அமர்ந்திருந்தனர்.
வீட்டின் முகப்பிலேயே தாய், தந்தையரின் கண்ணீர் அஞ்சலி பதாகை தொங்க விடப்பட்டிருந்தது.
வீட்டிற்குள் நாம் நுழைந்தோம்...... அங்கு அவர்களுடன் கதைப்பதற்கே மனம் இடம்கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டில் பெரியோர் யாரும் இல்லை. பெற்றோர் இன்றி பிள்ளைகள் அநாதைகளாக இருந்த நிலையை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
3 பிள்ளைகளுடன் 5 பேரடங்கிய அழகிய குடும்பம். தந்தையார் ஆயுள்வேத வைத்தியர் மற்றும் கட்டான நகர சபை உறுப்பினர். பிள்ளைகளில் மூத்தவர் பெண். அவர் சீனாவில் மருத்துவத்துறையில் கல்வி பயில்கின்றார். மற்றைய இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்திலும் மற்றையவர் தரம் 7இலும் கல்வி பயில்கின்றனர்.
அன்று ஆலயத்தில் தந்தையும் தாயும் திருப்பலியில் கலந்துகொள்ள, இருவரும் ஓர் இருக்கையிலும் பிள்ளைகள் ஆலயத்தின் மறு புறத்திலும் அமர்ந்திருந்துள்ளனர். தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பெற்றோர் மரணித்துள்ளனர். இதையடுத்து பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டனர். பாடசாலை செல்லும் 3 பிள்ளைகளின் கல்விச்செலவையும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைச் செலவையும் யார் ஏற்கப்போகின்றார்கள்? என அங்கிருந்த அயலவர் ஒருவர் கேட்ட கேள்வி மனதை நெகிழ வைத்து விட்டது. வீடு சோபையிழந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
இவர்களுடைய தந்தையார் தான் உழைத்து குடும்பத்தைக் காத்து வந்தார். இந்த இளம்பிஞ்சுகளுக்கு வாழ்க்கையைப்பற்றி என்னதான் தெரியப்போகின்றது... ஐயோ...கடவுளே....ஏன் இந்த நிலைமை....." என கண்ணீர் வடித்தார்.
இதேபோன்று பெற்றோரை இழந்த மற்றுமொரு உறவுகளை சந்தித்தோம்
ரொசிக்கா விமான வயது 36 வதுடைய பெண் 58 வயதுடைய ரொகான் என்ற தந்தையும் 58 வயதுடைய சாந்தி என்ற அன்னையையும் கடந்த தாக்குதலில் பலிகொடுத்திருந்தார்.
செல்லப்பிள்ளைகளாக வளர்த்துவிட்டார்
எம்மோடு உரையாட ஆரம்பித்த 36 வயதுடைய ரொசிக்கா,
அம்மாவும் அப்பாவும் பலியாகிவிட்டார்கள். எனக்கு சகோதரனும் சகோதரி ஒருவரும் உள்ளனர். அப்பாவின் கால்களுக்கு முன்பாகவே தற்கொலைக்குண்டுதாரி குண்டினை வெடிக்கச்செய்தார். அம்மாவும் அப்பாவும் இணைந்தே மரணித்துக்கிடந்தார்கள்.
ஒருவருக்கும் தீங்கும் நினைக்காத இவர்களுக்கே இந்த நிலைமை... வழமையாக உயிர்த்த ஞாயிறுக்கு முன்தினம் இரவு திருப்பலி நடைபெறும். அன்றைய தினம் சி காரணங்களால் அன்றைய தினம் திருப்பலி இடம்பெறவில்லை. ஒருவேளை திருப்பலி இடம்பெற்றிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
நான் அம்மாவிடம் சொல்லிகொண்டே இருந்தேன் இரவு புசைக்கு செல்வோம் என்று...இயற்கை அம்மாவையும் அப்பவையும் எடுத்துக்கொண்டது.
அப்பா தனியார் நிறுவனத்தில் நீர்விநியோக சபையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார். அவரின் வருமானத்திலேயே நாம் வாழ்ந்துவந்தோம். நீங்கள் தொழில் செய்யவேண்டாம் புதிய புதிய விடயங்களை மாத்திரம் படியுங்கள் என்றே கூறிக்கொண்டிருப்பார். கண்ணீர் சிந்தி அழுகின்றார்.....
தம்பி மாத்திரம் தனது சொந்த தேவைகளுக்காக சிறிய வியாபாரமொன்றை செய்து வந்தார். அது அவரது தேவைக்கு மாத்திரமே போதுமானதாக இருந்தது. நான் பட்டப்படிப்பொன்றை மேற்கொண்டிருந்தேன். அம்மா சுகயீனமுற்றதால் நான் படிப்பை இடைநிறுத்தினேன். மீண்டும் கல்வியைத் தொடருமாறு அப்பா வற்புறுத்தி வந்தார். இப்போ அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. கல்வியுமில்லை. உண்பதற்கு உணவுமில்லை.
எமதுபெற்றோர்கள் சுகயீனமடைந்து மரணித்திருந்தால்கூட இந்நிலைக்கு பாதிக்கப்பட்டிருக்க மாட்டோம். திடீரென அம்மா, அப்பா பிரிந்த அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை. அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் எனது அம்மாவும் அப்பாவும் உயிருடன் இருந்திருப்பார்கள். இந்த அரசியல்வாதிகள் பாதுகாப்புடன் செல்கின்றனர். அப்பாவி மக்களை இவர்கள் ஒரு எள்ளளவும் கருத்தில்கொள்ளவில்லை.
நாங்கள் தொழில்செய்வது அப்பாவுக்கு பிடிக்காது அவரது ஊதியத்திலேயே நாங்கள் சாப்பிடவேண்டுமென ஆசைப்பட்டார். எதிர்காலத்தில் நாம் என்ன செய்யப்பபோகின்றோம். இப்போது நான் உங்களுடன் நன்றாக கதைத்தாலும் இரவில் பைத்தியம் பிடித்ததுபோலவே இருக்கின்றது.
டிசம்பர் மாதமளவில் அடித்த பலத்த காற்றினால் வீடும் பலத்த சேதமடைந்துள்ளது. வீட்டில் தனியாக அச்சத்துடன் வாழ்கின்றோம். பாதுகாப்புக்கு யாஐம் இல்லை. பெற்றோர்களின் பாதுகாப்புப் போன்று எமக்கு யார் பாதுகாப்பு வழங்குவார்கள். தீடீரென நாம் எவ்வாறு தொழில் தேட முடியும். அரசாங்கம் நஸ்டஈடு வழங்கினாலும் அதைக்கொண்டு எவ்வளவு காலம் வாழ்க்கையை கொண்டு செல்வது. இந்த அரசாங்கம் கொடுக்கும் பணத்தால் அம்மா, அப்பவை திருப்பித்தர முடியாது. எமது வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இந்த துயரமான சம்பவத்திற்கு?ம் அரசாங்கம் பொறுப்புகூறியே ஆக வேண்டும். இது வரை எந்தவொரு அரசியல் வாதிகளோ வந்து பார்க்கவுமில்லை துக்கம் விசாரிக்கவுமில்லை.
அப்பாவின் ஒருமாத சம்பளம் நேற்றுத்தான் கிடைத்த்து....கதறி அழுகின்றார். மரணச்சடங்குகளைச் செய்வதற்குக்கூட எம்மிடம் பணமிருக்கவில்லை.
இவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் சோகக் கதைகள் எமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டன.
மேலும் அடுத்தடுத்த வீடுகளுக்கு செல்ல எமது மனம் இடமளிக்கவில்லை. ஏனைய வீடுகளிலும் இந்த சோகமே காணப்படும் என எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
இதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் அலுவலகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம். ஒருவர் ஒருவருடன் யாரும் கதைக்கவில்லை. எம்மையும் சோகம் ஆழ்கொண்டது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பல உயிர்கள் மர தருவாயில் இருக்கின்றன. பல ஊனமடைந்துள்ளனர். ஒரு குடும்பத்தில் பலரை இழந்து உறவுகள் அந்த அதிர்ச்சியில் இருந்து எவ்வாறு மீளப்போகின்றார்கள் என தெரியவில்லை.
அதேபோன்று உயிர் பிழைத்தவர்களும் தாக்குதலின் வடுக்களை உடலில் சுமந்துகொண்டிருகின்றனர். அவர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குடும்பத்தை வழிநடத்தி வந்தவர்களும் உயிரை விட்டுள்ளனர். இதனால் பலர் ஒருவேளை உணவுக்கு கூட திக்குமுக்காடி நிற்கின்றனர்.
இந்த நிலைமைக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் கூற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் மேற்கொள்ளப்பட போகின்றது என அரசாங்கம் அறிந்தும் அசட்டையாக இருந்துவிட்டது. இதனால் எம் மக்களுக்கு இந்த துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேச மக்கள் இந்நிலைமையே ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நஸ்ட ஈடுகளையும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடியாக வழங்க வேண்டும். மேலும் தொழில்துறை இல்லாதவர்களுக்கு தொழில்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
மருத்துவ செலவீனங்களுக்கு தேவையான பண உதவிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அநாதையாக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் இலங்கையில் இனி ஒரு அசம்பாவிதம் இருப்பதற்கு அரசாங்கம் உறுதிப்புன வேண்டும் என்பதோடு இந்த தாக்குதல் சம்பவத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் கேவலமான அரசியரை செய்யக் கூடாது.
படப்பிடிப்பு ; ஜே.சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM