(ஆர்.விதுஷா)

தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான 600 கடிதங்களை பகிர முற்பட்ட மூவரை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 600 கடிதங்களை தபால் செய்வதற்காக நேற்றைய தினம் கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வருகை தந்து கடிதங் அஞ்சல் செய்யுமாறு கூறியுள்ளனர். 

அந்த கடிதங்கள் தொடர்பில் சந்தேகித்த தபால் நிலைய ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் அந்த கடிதங்கள் தொடர்பில் சோதனையை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடிதங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகவும் இனங்களுக்கு இடையில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னதாகவே அறிந்து வைத்திருந்தார் என்ற கருத்துக்களை உள்ளடக்கிய இரண்டு கடிதங்களும் காணப்பட்டதாக பொலிசார் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் . சந்தேக நபர்கள் 28 வயதுடைய வத்தேகம பகுதியை சேர்ந்த கரன்தெனிய கெதரசம்பத் குமார , 41வயதுடைய அலவௌ பகுதியை சேர்ந்த விஜேரத்ன முதியன்சேலாகே தனுஷ பிரியதர்ஷன மற்றும் 24 வயதுடைய பொல்கொல்ல பகுதியை சேர்ந்த படபந்திகே கவிந்து தக்ஷில வீரசேன என்பவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

முக்கிய அமைச்சர் ஒருவரின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்திகாரியாக பணிபுரியும் ஒருவரும், அமைச்சின் வாகன ஓட்டுனர் மற்றும் அமைச்சரின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.