ஜெயலலிதா இரண்டு விரல்களைக் காட்டுவது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் இரண்டு பேர் இறப்பார்கள் என்ற அர்த்தத்தில் உள்ளது என கோவையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த 5 வருடமாக ஜெயலலிதா என்னதான் செய்தார் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் இரட்டை விரல் காட்டியது வெற்றிச் சின்னமாக இருந்தது. ஆனால், இன்று ஜெயலலிதா இரண்டு விரல்களைக் காட்டுவது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் இரண்டு பேர் இறப்பார்கள் என்ற அர்த்தத்தில் உள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலையில்லை.

ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களுக்காக நான் என்கிறார்களே அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்த கோவையை இந்தியாவின் மான்செஸ்டர் என்றார்கள். ஆனால் இன்று அதே கோவை மானங்கெட்ட மான்செஸ்டராகியுள்ளது.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் என்ன செய்தார்கள் என்பதை வெள்ளையறிக்கை வெளியிட முடியுமா? வெள்ளையறிக்கை வேண்டாம், வெறும் அறிக்கை அவர்களால் கொடுக்க முடியுமா?

இதேபோலத்தான் நல்லாட்சி அமைக்க ஆதரவு கேட்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ஐந்து முறை செய்யாதவர், இப்போது மட்டும் என்ன செய்து கொடுத்துவிடப் போகிறார்?

வேட்பாளர்களை மாற்றுவதிலும், கொள்ளையடித்தது யார் என்பதிலும் இரு கட்சியினரிடையேயும் சண்டை நீடிக்கிறது. இந்த சண்டை தொலைக்காட்சியிலும் தொடருகிறது. 25 ஆண்டுகளாக இருவரும் மாறி மாறி ஆட்சி அமைத்தும் மக்களுக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. பின்னர் ஏன் இந்த அக்கப்போர் செய்கிறார்கள் எனப் புரியவில்லை என்றார்.