(அருள் லுயிஸ்)

பாக்கிஸ்தானின் ஜாய்ஷ் - இ - மொஹம்மட் இயக்கத்தின் தலைவர் மசூத் அஸ்கர் பாக்கிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் உரைகல்லாகவும், இந்தியா மீதான மறைமுகமான போரொன்றின் முகவராகவும் கடந்த ஒரு தசாப்த காலமாக விளங்கிவந்தார். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் தடைகள் கமிட்டி அவரை ஒரு உலகப்பயங்கரவாதி என்று நாமகரணம் சூட்டுவத்றகு முடிவெடுத்த போது, அதற்குச் சீனா இணங்கியதையடுத்து கடந்த புதன்கிழமை இவையனைத்தும் முடிவிற்கு வந்தன.

மசூத் அஸ்கரை உலகப் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு ஐ.நாவில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சிகளுக்கு சீனா தடையாக இருந்துவந்தது. அதனால் அவருக்கெதிரான அந்த முயற்சிகளை ஐ.நாவால் முன்னெடுக்கமுடியாத நிலை இருந்தது. ஒருவகையில் நோக்குகையில் சீனாவின் முன்னைய நிலைப்பாடு மசூத் அஸ்கருக்கு சர்வதேச பாதுகாப்பொன்றை பெய்ஜிங் வழங்குவது போன்று இருந்தது. ஆனால் இறுதியில் அதிகரித்துவந்த சர்வதேச நெருக்குதல்களின் காரணமாக சீனா அதன் நிலைப்பாட்டைத் தளர்த்த வேண்டியதாகிவிட்டது. சீனாவின் இந்த முடிவு பயங்கரவாதம் மீதான அரசியல் மற்றும் இராஜதந்திரப் போரில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், உபகண்டத்தையும் தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

இதுவரை காலமும் பாக்கிஸ்தானும், சீனாவும் மசூத் அஸ்கருக்கு வழங்கிவந்த ஆதரவு சீனாவையும், பாக்கிஸ்தானையும் ஒருவகையில் தனிமைப்படுத்தியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 191 உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடுமே (பயங்கரவாதம் தொடர்பான மற்றைய விவகாரங்களில் 'உனது பயங்கரவாதி எனது விடுதலைப்போராளி" என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்திருக்கின்ற நாடுகள் உட்பட) இஸ்லாமாபாத்தினதும், பெய்ஜிங்கினதும் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. இந்தியா சளைக்காமல் மறைவழியூடாக முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே மசூத் அஸ்கர் விடயத்தில் சாதிப்பதற்கு உதவியது என்பதில் சந்தேகமில்லை என்று ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சயீத் அக்பருதீன் கூறியிருக்கின்றார்.

இப்போது பயங்கரவாதம் மீதான அரசியல் மற்றும் இராஜதந்திரப் போரில் அடுத்த மைல்கல் என்ன என்பதே கேள்வி. அது முற்றுமுழுதான போரென்று இல்லை. பயங்கரவாதத்தை வரையறை செய்வதில், பயங்கரவாதத்திற்கு எதிராகக் கருத்தொருமிப்புக்கு வருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய உலகலாவிய முயற்சியே அதுவாக இருக்கும்.

 1996 ஆம் ஆண்டில் இந்தியா சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விரிவான சாசனமொன்றைப் பிரேரித்தது. விடுதலைப் போராளிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் சில நாடுகள் தவறான வேறுபாட்டை முன்வைத்ததன் காரணத்தினால் பயங்கரவாதத்திற்கு வரைவிலக்கணம் வகுப்பதில் ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினை காரணமாக இந்தியா பிரேரித்த அந்த சாசனத்தை முன்நோக்கி நகர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியாமல் தடங்கல்நிலை ஏற்பட்டது.

 பயங்கரவாதிகள் கடைப்பிடிக்கின்ற கோட்பாடுகள் அல்ல: சிறுவர்கள் உட்பட குடிமக்களை வகைதொகையின்றி கொடூரமான முறையில் கொலை செய்வதில் அவர்கள் கடைப்பிடிக்கின்ற வழிமுறைகளே பயங்கரவாதம் என்பதை இவர்களெவரும் சிந்தித்துப் பார்க்கவில்லை. 

அந்த சாசனம் தொடர்பில் கருத்தொருமிப்புக்கு வருவதென்பது ஐ.நாவில் இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக இருக்கும்  ரொஹான் பெரேராவின் முன்னாலுள்ள சவாலாக இருக்கிறது. அவர் சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார்.

இஸ்லாமாபாத் மீது சீனா அனுதாபம் கொண்டிருக்கும் போது கூட மசூத் அஸ்கர் விடயத்தில் பெய்ஜிங் அதன் நிலைப்பாட்டை முற்றுமுழுதாக மாற்றியமை பயங்கரவாதிகளை வகைப்படுத்துவதில் கடைப்பிடிக்கின்ற கொள்கையை சுயபரிசோதனைக்கு உட்படுத்த இஸ்லாமாபாத்தை நிர்பந்திக்கலாம். 

இந்த சுயபரிசோதனையை எப்போதோ பாக்கிஸ்தான் செய்திருக்க வேண்டுமென்றே உலகம் எதிர்பார்த்திருந்தது. பாக்கிஸ்தானைப் பொறுத்தவரை உள்நாட்டில் அனர்த்தங்களை விளைவிக்கின்ற பயங்கரவாதிகளை 'கெட்ட பயங்கரவாதிகள்" என்றும், இந்தியாவில் அக்கிரமங்களைச் செய்கின்றவர்களை 'நல்ல பயங்கரவாதிகள்" என்றும் ஒருவகையான புதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பது வெளிப்படையானது.

ஒருவகையான மூளைக்கோளாறு போன்ற இந்தக் கொள்கை பாக்கிஸ்தானுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக பாக்கிஸ்தானைக் காண்பிப்பதற்கு அந்நாட்டின் இராஜதந்திரிகள் எப்போதுமே முன்நிற்பார்கள். 

இருந்தும்கூட இஸ்லாமாத் - அல்லது அதன் இராணுவத்தளபதிகள்,இராணுவத்தின் கையாட்களாக பயங்கரவாதிகளை வைத்திருப்பதற்கான விலையை தொடர்ந்து செலுத்த விரும்பியவர்களாகவே இருந்தார்கள். ஆனால் உலகைப் பொறுத்தவரை அது மிகவும் உயர்ந்ததொரு விலையாகும்.

பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி தான் மேற்கொள்ளும் போருக்கு இந்தியா எடுக்கக்கூடிய பதிலடி நடவடிக்கைகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அணுவாயுதங்கள் ஒரு தடைக்காப்பாக இருக்கின்றது என்ற அதன் மூலோபாயக் கோட்பாடு இந்தியாவின் காஷ்மீரில் கடந்த பெப்ரவரியில் 40 இற்கும் அதிகமான மத்திய ரிசோட் பொலிஸ் படையினரைப் பலியெடுத்த புல்வாமா தாக்குதல்களையடுத்து சோதனைக்குள்ளானது.

புல்வாமா தாக்குதல் உலகை வேதனைப்படுத்தியிருந்த அதேவேளை, பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட பதிலடி விமானத் தாக்குதல்களும், இந்திய விமானமொன்றை சுட்டுவீழ்த்தி பாக்கிஸ்தான் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலும் உபகண்டத்தில் நிலைவரம் எந்தளவிற்கு சஞ்சலமானதாக இருக்கிறது என்பதை சர்வதேச சமூகத்திற்குக் காண்பித்தது.

புல்வாமா தாக்குதலை கண்டனம் செய்த ஐ.நா பாதுகாப்புச்சபையின் அறிக்கையை சீனா தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை ஒரு முறைப்படியான தீர்மானமாக இருக்கவில்லை. மசூத் அஸ்கர் விடயத்தில் சீனா விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அல்கைதா, இஸ்லாமிய அரசு இயக்கம் மற்றும் அவற்றோடு இணைந்த அமைப்புக்களின் விபரங்களைக் கையாளும் ஐ.நா பாதுகாப்புச்சபையின் தடைகள் கமிட்டியினால் மசூத் அஸ்கர் ஒரு பயங்கரவாதி என்று உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் அவரைச் சேர்ப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பிரேரணையை கடந்த மார்ச் மாதத்தில் சீனா 4 ஆவது தடவையாகவும் வீட்டோ செய்தது.

இதனால் சுறுசுறுப்படைந்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதி முடக்கம் மற்றும் பயணத்தடை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளின் கீழ் மசூத் அஸ்கரை ஒரு பயங்கரவாதி என்று பாதுகாப்புச்சபையைக் கொண்டே பிரகடனம் செய்ய வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அமெரிக்காவினால் வலியுறுத்தப்பட்ட தீர்மானத்தை அந்நாடுகள் ஐ.நா உறுப்பு நாடுகளின் மத்தியில் சுழற்சிக்குவிட்டு அதற்கு ஆதரவுதேடி கடுமையாகப் பிரசாரம் செய்தன. தன்னிடமிருக்கக்கூடிய சகல வளங்களையும் இந்த விடயத்தில் பயன்படுத்துவதாக அமெரிக்கா பிரகடனம் செய்தது. அந்தத் தீர்மானம் பாதுகாப்புச்சபையில் கொண்டுவரப்பட்டிருந்தால் சீனா பகிரங்கமாகவே வீட்டோ செய்து அஸ்கரை பாதுகாக்க வேண்டியிருந்திருக்கும். அஸ்கரை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துவதற்கு முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய சான்றுகள் நம்பிக்கைக்கு உரியவையாக இருக்கவில்லை என்று சீனா கூறியது. ஆனால் திடீரென்று தான் நிராகரித்த சான்றுகளையே நம்பக்கூடியவையாக இருக்கின்றன என்று சீனா கூறுகின்றது.

இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளுக்குப் புறம்பாக ஆப்கானிஸ்தானின் அண்மைய நிகழ்வுப்போக்குகள் வாஷிங்டனுக்கு இன்னுமொரு தூண்டுவிசையாக அமைந்தது. ஆப்கான் நெருக்கடிக்கு இணக்கத் தீர்வொன்றைக் காணும் முயற்சியாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை முற்றாக மடக்குவதற்கு இந்தியா விரும்பும். அத்துடன் பாக்கிஸ்தானில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தனது கையாட்களான இயக்கங்களை இந்தியா நோக்கி பாக்கிஸ்தான் திருப்பாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டியதும் அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமானதாகும்.

சீனாவைப் பொறுத்தவரை தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் அது விளங்கி, புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்தது. சீனாவின் உய்குர் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் இஸ்லாமிய பயங்கரவாதப் பிரச்சினை இருக்கின்றது. அதேவேளை ஜாய்ஷ் - இ - மொஹம்மட் இயக்கத்திற்கும் மசூத் அஸ்கருக்கும் சீனா அளித்த ஆதரவு காரணமாக உய்குர் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை பெய்ஜிங்கினால் சம்பாதித்துக்கொள்ளவும் முடியவில்லை. நவீன பட்டுப்பாதை என்று வர்ணிக்கப்படும் மண்டலமும், பாதையும் செயற்திட்டம் விரைந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பெய்ஜிங் அந்தத் திட்டத்தில் தனது பல்லாயிரம் கோடி டொலர்கள் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியும் இருக்கிறது.

ஏற்கனவே பாக்கிஸ்தானால் பயங்கரவாதத் தாக்குதல்களைச் சீனா எதிர்கொண்டது. பாக்கிஸ்தானில் சீனாவின் தொழிலாளர்களும், அதன் வளங்களும் தாக்குதலுக்கு இலக்காகின. கராய்ச்சியிலுள்ள சீனத் துணைத்தூதரகம் கூட கடந்த வருடம் தாக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சீனா உலகின் பல பாகங்களிலும் தனது முதலீடுகளை நம்பகபூர்வமாகப் பாதுகாக்க வேண்டுமானால் சகலவிதமான பயங்கரவாத வடிவங்களுக்கும் எதிராக வெளிப்படையாக வரவேண்டியிருந்தது. அதற்கான தருணம் இதுவாகும்.

பலகோடி டொலர்களை முதலீடாகவும், கடனாகவும் கொடுத்திருக்கும் சீனா இருவாரங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையின் உறுதிப்பாட்டைச் சீர்குலைப்பதில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு இருக்கும் ஆற்றலையும், அதன் விளைவாக தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் கண்டுகொண்டது. இலங்கை தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களும், அவற்றின் விளைவான படுகொலைகளும் சீனா மீது சர்வதேச சமூகத்தின் நெருக்குதல் அதிகரிக்க காரணமாய் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா பாதுகாப்புச்சபையில் தடைகள் கமிட்டியின் தலைவரான இந்தோனேசிய இராஜதந்திரியான டியான் ட்ரையன் ஷியா ஜனாயினால் இந்த நிகழ்வுப்போக்குகள் மிகவும் விவேகமான முறையில் பயன்படுத்தி மசூத் அஸ்கருக்கு எதிராக கருத்தொருமிப்பு ஒன்றை ஏற்படுத்த இயலுமாக இருந்தது.

உபகண்டத்தில் பாக்கிஸ்தான் மிகவும் கடுமையான தெரிவொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. மசூத் அஸ்கருக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும், ஜாய்ஷ் - இ - மொஹம்மட் மற்றும் லஸ்கர் ஈ தய்பா என்பவற்றுக்கு எதிராக ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும் அனுசரித்துச் செய்றபடுவதா அல்லது சர்வதேச அபிப்பிராயத்தை தொடர்ந்தும் அலட்சியம் செய்வதா என்பதை பாக்கிஸ்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கின்றது. 

சீனாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் உண்மையில் மானசீகமானதாக இருக்குமானால்  பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி இந்தியாவுடன் மறைமுக யுத்தத்தை நடத்துகின்ற போக்கிலிருந்து பாக்கிஸ்தானை விடுபடச் செய்ய முடியும். பாக்கிஸ்தான் பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்குவதைக் கைவிட வேண்டுமென்ற புதுடில்லியின் பிரதான நிபந்தனையை இஸ்லாமாபாத் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தல்களுக்கு பிறகு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பொன்றும் இருக்கக்கூடும்.

(சௌத் ஏசியா மொனிட்டர்)