தமிழர்களின் இருப்பிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை தமது நெஞ்சத்து நினைவாலயத்தில் தமிழர்கள் நினைவு கூரும் நாள். தமிழர் நிலம், சுதந்திரதாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்  மாவீரர்களை தமிழர்கள் தமது இதயக்கோயிலில் வைத்து நெஞ்சுருகி பூஜிக்கும் திருநாள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினார்.


பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே சிறிதரன் எம்.பி.  இவவாறு     கூறினார்.

தமிழர்கள் வாழ்வில் இன்று ஒரு புனித நாள். எமது மாவீரர்களின் நினைவு நாள். தமிழர்களின் இருப்பிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை தமது நெஞ்சத்து நினைவாலயத்தில் தமிழர்கள் நினைவு கூரும் நாள். தமிழர் நிலம், சுதந்திரதாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை தமிழர்கள் தமது இதயக்கோயிலில் வைத்து நெஞ்சுருகி பூஜிக்கும் திருநாள்.


தமது உன்னதமான உயிருக்கும் மேலாக எமது தேசத்தின் விடுதலையை நேசித்து  உயரிய இலட்சியத்துக்காக சாவைத் தழுவிக்கொண்டகூனர். தமிழர் நிலம் விடுதலை பெற்று தமிழ் மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற இலட்சியத்திற்காக மடிந்தவர்கள். ஆயிரம் ஆயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து எமது விடுதலைவானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திர சிற்பிகளை நினைவுகூரும் புனித நாள் இது.


இந்த உலகைத்துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காக தமது உயிரை உவந்தளித்த உத்தமர்களுக்கு தமிழர்கள் இன்று சிரம் தாழ்த்தி வணங்கும் நன்னாளாகும்.


விடுதலை என்ற வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம், அந்த விழுமியத்தை இலட்சியமாக வைத்து அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்களின் மகத்தான நாள், அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயர் வரிகள். எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் நாள் என்றார்.