மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த எஸ்.வினோதன் என்ற 15 வயது சிறுவன், சாமிமலை ஸ்காபுரோ ஆற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேற்படி சிறுவனை காணவில்லை என நேற்று முன்தினம் சிறுவனின் உறவினர்களால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சிறுவன் கொழும்பில் இருந்து தனது சிறிய தந்தை வீட்டுக்கு கடந்த 20ஆம் திகதி விடுமுறையை களிப்பதற்காக வந்த நிலையிலே, 21ஆம் திகதி காணாமல் போய்யுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலே குறித்த சிறுவனின் சடலம், மேற்படி ஆற்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. ஹட்டன் நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

(க.கிஷாந்தன்)