(நா.தனுஜா)

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோர் நாட்டில் காணப்பட்ட அடிப்படைவாத அமைப்புக்களுடன் செயற்பட்டிருக்கின்றார்கள், அத்தகைய அமைப்புக்களுக்கு நிதி வழங்கியிருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்வது அவசியமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் அரசியல் சுயலாபம் பெறும் நோக்கத்தைக் கைவிட்டு, இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஒருவர் மீது மற்றொருவர் பழிசுமத்துவதை சற்று புறந்தள்ளி, இந்த தீவிரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அனைவரும் ஒருமித்துப் பயணிக்க வேண்டும் 

அத்தோடு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மிகமோசமான பயங்கரவாத செயற்பாடு என்பதுடன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

இந்தத் தாக்குதல்களுக்கு பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளமை வேதனையளிக்கின்றது. இந்நிலையில் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், இதனைத் தோற்கடிப்பதற்கு எமக்கு உதவுவதற்கும் முன்வந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் உடனிருக்கின்றோம். அவர்களது துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.