12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிப்பது முக்கியமானதொன்றாகும். ஏனெனில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிட்டும்.

தற்போது புள்ளி பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்வகிக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை அடையலாம். 

ஆனால் சென்னை அணியின் ஓட்ட விகிதம் மோசமான நிலையில் உள்ளதனால் அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய கடப்பட்டடில் உள்ளது.

இந் நிலையில் காய்ச்சல் காரணமாக மும்பையுடனான போட்டியில் விளையாடாதிருந்த சென்னை அணித் தலைவர் தோனி இப் போட்டியிலும் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.

ரிக்கி பொண்டிங்கின் பயிற்சி மற்றும் கங்குலியின் ஆலோசனையின் மூலம் டெல்லி அணி இந்த தொடரில் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருக்கிறது. 

12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் டெல்லி அணி இப் போட்டியில் களமிறங்கவுள்ளது.