(செ.தேன்மொழி)

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்களை கருத்திற்கொண்டு மிகவும் எளிமையான முறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அதன் பிரச்சார செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

” பாதுகாப்பான தாய் நாடு உத்வேகமான வேலைத்திட்டம் " எனும் தொனிப் பொருளில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும், பேரணிகள் எதுவும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரகட்சி தலைமக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு மே தினக் கூட்டத்தை இரத்து செய்வதற்கே தீர்மானிக்கப்பட்டது. எனினும் மறைந்த தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர் தினமான மேதினத்தில் நினைவு கூறப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தான் எளிமையான முறையில் இதனை நடத்த தீர்மானித்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தொடர்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த அனைவரதும் ஆத்தம சாந்திகாக அனைத்து மதத்தலைவர்களது பங்குபற்றுதலுடன் விஷேட ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.

மேலும் இந் நிகழ்வில் சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ,முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட குறிப்பிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் மாத்திரம் கலந்து கொள்வார்கள் என்றார்.