பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். செல்வக்குமார் தெரிவித்துள்ளார். 
யாழ்.உடுவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். 
பாடசாலைகள் எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட முன்னர் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள். 
அதன் பின்னர் பாடசாலை அதிபர் , ஆசிரியர் , பெற்றோர் , அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை நாட்களில் நுழைவாயில் காவல் கடமைகளில் ஒழுங்கு படுத்தப்பட்ட நேரங்களில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள். 
அதேவேளை திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளின் போது , திருமண வீட்டார் மற்றும் மண்டப உரிமையார்கள் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் எவரேனும் வந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவியுங்கள். 
பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்நேரமும் தயராக உள்ளனர் என தெரிவித்தார்.