நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கவேண்டி, திருவண்ணாமலை அருகே ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் செய்து பொதுமக்கள் நூதன முறையில் வழிபாடு செய்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் வறண்டுபோய் காணப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வறட்சியை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருவதுடன், குடிநீர் கேட்டு ஆங்காங்கே மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராம மக்கள், நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கவேண்டி கிராமத்தில் உள்ள பொன்னியம்மனுக்கு களி மற்றும் கருவாட்டு குழம்பு வைத்து படையலிட்டு, ஓணான் மற்றும் தவளைக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து, ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர்.

இந்த நூதன வழிபாடு குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

“இந்த மாவட்டத்தில் மழை பெய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் இல்லாமல் விளைந்த பயிர்கள் காய்ந்து போனதால், அவைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இங்கு ஏரியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் அம்மனுக்கு கருவாட்டு குழம்பு, களி செய்து படையலிட்டு ஓணானுக்கும் தவளைக்கும் திருமணம் நடத்தி ஒப்பாரி வைத்து வழிபட்டோம். இதையடுத்து நல்ல மழை பெய்தது. தற்போது, மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டும் மழை பெய்ய வேண்டி இந்த வழிபாடு நடத்தினோம். இன்னும் ஓரிரு நாளில் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.