(எம்.மனோசித்ரா)

மனிதாபிமானம் தோல்வியடையும் போது தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பிக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவை வெகு விரைவில் புனர்நிர்மாணம் செய்யப்படும். 

தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு இன, மத பேதங்களைக் கடந்து அனைவரும் மனிதாபிமானத்துடன் ஒற்றுமையாக செயற்படுவதே பாரிய பலமாக அமையும். எனினும் மனிதாபிமானம் தோல்வியடையும் போது தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

குறித்த ஆலயங்களை புனரமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விஷேடமாக நாட்டின் பாதுகாப்புத் துறை , முப்படையினர் மற்றும் அபிவிருத்தி அமைச்சு என்பன அரசாங்கத்துடன் இணைந்து இவற்றை மீள் நிர்மானம் செய்து மக்களின் வழிபாடுகளுக்கு கையளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.