யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று  அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகின்றன.

குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது.

குருநகரின் சுமார் 300 வீடுகள் இவ்வாறு சோதனையிடப்பட்டது. எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதலையடுத்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பற்று வருகின்றன.

குறிப்பாக பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதிகள் ஆகிய இடங்களில் இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.