(எம்மனோசித்ரா)

வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்த முஸ்லிம் பெண்கள் குறித்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பையும் பொலிசார் கோரியுள்ளனர். 

கடந்த 19 ஆம் திகதி மீரிகம பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பணை நிலையத்தில் சிங்கள பௌத்த பெண்கள் விகாரைகளுக்கு அணியும் வெள்ளை நிற 10 க்கும் மேற்பட்ட ஆடைகளை கொள்வனவு செய்த புர்கா அணிந்த மூன்று பெண்களையும் சாரதியையும் அடையாளம் காண பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியை கோரியுள்ளது. 

மே மாதம் இடம்பெற கூடிய வெசக் பௌர்ணமி தினத்தில் தாக்குதல் நடத்துவதற்காகவே வெள்ளை நிற ஆடைகளை கொள்வணவு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் கடந்த 19 ஆம் திகதி பெரிய வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மீரிகம பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் 29 ஆயிரத்து 20 ரூபாவிற்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஆடைகளை கொள்வனவு செய்துள்ளனர். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வெள்ளை நிற ஆடைகள் சில சாய்ந்தமருது சுனாமி வீட்டுத்திட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் , உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் முன்னெடுக்க கூடும் என்ற எச்சரிக்கையினை புலனாய்வு பிரிவு விடுத்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் அனைத்து பிரதான நகரங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் என அனைத்து வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத குழுவினால் இராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்த கூடும் என்ற புலனாய்வு எச்சரிக்கையே தற்போது காணப்படுகின்றது. 

எவ்வாறாயினும் பலத்த பாதுகாப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.