கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கேரளாவில் பதுங்கியிருப்ப தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில், அடுத்தடுத்து சக்தி வாய்ந்த தற்கொலைக் குண்டுகள் வெடித்தன. 

இதில், 253 பேர் பலியாகியுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டடோர் படுகாயம் அடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, இலங்கையில், அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, குண்டு வெடிப்பு தொடர்பாக, இராணுவத்தினரும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பொறுப்பேற்றுள்ளது. எனினும், ஐ.எஸ்., ஆதரவுடன், இந்த தாக்கு தலை, உள்ளூர் பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உள்ளூர் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹ்ரான் ஹஷிம், குண்டு வெடிப்புக்கு பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் சஹ்ரான் ஹஷிமும் இறந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது. 

இந்த தாக்குதல் குறித்து, இந்திய உளவுத் துறை, இலங்கைக்கு முன் கூட்டியே தகவல் அளித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.

மேலும், பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஷிம், கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், இளைஞர்களை மூளைச் சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர வைத்துள்ளமை தெரியவந்துள்ளது. ஏற்கனவே, கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் இருந்து, 20 க்கும் மேற்பட்டோர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தது பற்றி, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 'இலங்கை தாக்குதலில் தொடர் புடைய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கேரளாவில் பதுங்கியிருக்கலாம்' என, என்.ஐ.ஏ., சந்தேகித்தது. இதையடுத்து, கேரள மாநிலம், காசர்கோடு, பாலக்காடு பகுதிகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இது குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவிக்கையில், 

ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும், காசர்கோட்டை சேர்ந்த இருவரது வீடுகள் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது. அங்கு, பல, 'சிம் கார்ட்கள், மெமரி கார்ட்கள், பென் டிரைவ்கள்' ஆகியவற்றை கைப்பற்றியுள்ளோம். மேலும், அரபி மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளையும் கைப்பற்றினோம்.

இலங்கை குண்டு வெடிப்பின் சூத்திரதாரி, சஹ்ரான் ஹஷிமின் பேச்சுக்கள் அடங்கிய, 'டிவிடி' மற்றும் புத்தகங்களை கைப்பற்றியுள்ளோம். சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்து, விசாரித்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், காசர்கோட்டை சேர்ந்தவர்களின் பெயர்கள், அபு பக்கர் சித்திக், அகமது அராபத் என, தெரியவந்துள்ளது. மூவரையும் கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.