ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.

அதன்படி இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும், அசமந்தப் போக்காக செயற்பட்டமைக்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி வகிக்கும் போது, அவருக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித்தவுக்கும் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

அதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோ விலகினார்.

எனினும் ஜனாதிபதியின் உத்தரவினை பொலிஸ் மா அதிபர் கருத்திற் கொள்ளாது தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றார். இந் நிலையிலேயே அவரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக அக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, பிரதமருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.