ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வேன் சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்தார்.

“விபத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்து மூவரின் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், விபத்தில் உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது பாட்டனாரின் குடும்பத்துக்கு எதிரி 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க வேண்டும்.

உயிரிழந்த முச்சக்கர வண்டிச் சாரதிக்கு 3 இலட்சம் ரூபா பணத்தை எதிரி இழப்பீடாக வழங்கவேண்டும். அதனைச் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க நேரிடும். மேலும் 3 குற்றங்களுக்காக எதிரி தலா 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் 7 ஆயிரத்து 500 ரூபாவைத் தண்டமாகச் செலுத்தவேண்டும்.

எதிரியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாகத் தடை செய்யும் ஆணை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு நீதிமன்று வழங்குகிறது” என்று நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பளித்தார்.