கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு இறுதிக்கிரிகைகள் மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சடலமொன்று கண்டி நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. 

மரண விசாரணையை நடத்தி இறுதிக் கிரியைகள் பூர்த்தியாக்கப்பட்ட 29 வயதுடைய நபர் ஒருவருடைய சடலமே கண்டி பிரதான நீதவான் புத்திக்க எஸ்.ராகல முன்னிலையில் தோண்டப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கண்டி ஹப்புகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்து ஒன்றில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இவரது சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை  அச்சமயம் கண்டி வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி சிவசுப்பிரமணியம் நடத்தி இருந்தார். 

எம்.ஜீ. தில்ஷான் சாமர என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையின் சடலமே இவ்வாறு தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

மரணித்தவரின் தந்தையான எம்.ஜீ.நிஹால் உபதிஸ்ஸ என்பவர் இம் மரணம் தொடர்பாக தனக்கும் குடும்பத்தினருக்கும் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பாக மீண்டும் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கண்டி பிரதான நீதவானிடம் முறைப்பாடு செய்திருந்தார்.  

அதற்கு இணங்க, கண்டி பிரதான நீதிவான் புத்திக்க எஸ்.ராகல இச் சடலத்தை தோண்டி எடுத்து கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து இரண்டாவது பிரேத பரிசோதனையை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ் உத்தரவிற்கு அமைய  22 ஆம் திகதி இச் சடலம் பிரதான நீதிவான் புத்திக்க எஸ்.ராகல முன் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இப் பிரேத பரிசோதனையின் அறிக்கை கிடைக்க பெற்ற பிண் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக உயிரிழந்தவரின் தந்தையான எம்.ஜீ. நிஹால் உபதிஸ்ஸ    எம்மிடம் கருத்து தெரிவிக்கையில், 

எனது மகனின் மரணம் தொடர்பாக எங்களுக்கு சந்தேகம் உண்டு. முச்சக்கர வண்டி விபத்து இடம் பெற்ற இடம், விபத்தின் விதம், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம், மற்றும் விபத்து இடம் பெறும் போது முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் தப்பியோடியமை ஆகியன இச் சந்கேத்தை எம் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதனால் நாங்கள் இது தொடர்பாக மேலும் ஒரு விசாரணையை நடாத்துமாறு கேட்டுக்கொண்டோம் என்று தெரிவித்தார். 

பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் சந்திரசேகர உட்பட பல அதிகாரிகள் இதன் போது சமூகம் தந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கான பிரதேசவாசிகள் குடும்பத்தினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.