இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் அல்கொய்தா பயன்படுத்தும் ரி.ஏ.ரி.பி எனப்படும் இரசாயன வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக  விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஓய்வு நிலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரும், வெடிபொருட்கள் தொடர்பான துறைசார் நிபுணரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகருமான நிமல் லியூகே வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்திய தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தீவிரவாதத்தின் இலக்கு இலங்கை மீது படிவதற்கான காரணம் என்ன?

பதில்:- மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் கேந்திர ஹோட்டல்கள் ஆகியவற்றில் சொற்பகால இடைவெளியில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் உலகத்தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மிலேச்சத்தனமான தாக்குதலுக்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் நியூஸிலாந்து தேவாலய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

உண்மையிலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அனைத்து இனங்களும் சமாதானமாக வாழும் ஒரு நாட்டில் இன்னொரு நாட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கான பழிவாங்கல்களாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருப்பதும், குறிப்பாக, தமிழ் கத்தோலிக்க மக்களை இலக்குவைத்திருப்பதும் விசேடமாக கவனத்தில் கொள்ளவேண்டியதாகின்றது. 

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் தாங்கள் நீண்டகாலம் செயற்பட்டவர் என்ற அடிப்படையில், உங்களுக்கு அப்போது கிடைத்திருந்த தகவல்களின் பிரகாரம் அங்குள்ள முஸ்லிம் சமுகத்தின் இஸ்லாம் மதத்தின் பால் கடுமையான போக்கொன்றை நோக்கி நகருவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டிருந்தனவா? 

பதில்:- இல்லை, ஆனால் கிழக்கு மாகாணத்தில் எனது தலைமையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி அனைத்து பொதுமக்களையும் நாம் பாதுகாத்தோம். விசேடமாக ஒலுவில், மண்முனை, காத்தான்குடி, மட்டக்களப்பு முகாம்களில் இருந்தபோது தமிழ், முஸ்லிம் மக்களுடன் நெருக்கமாகவும் பழங்கியுள்ளேன். அக்காலத்தில் நாம் எமது உயிர்களை துச்சமென மதித்தே மக்களை விடுதலைப்புலிகளிடமிருந்து காப்பாற்றினோம். அவ்வாறான நிலையில் அம்மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் இந்த கொடுரமான தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றார்கள் என்ற தகவல்கள் கிடைக்கின்றபோது நாம் காப்பாற்றிய சமூகத்தினைச் சேர்ந்தவர்களா இவ்வாறு மிலேச்சத்தனமாக செயற்பட்டிருக்கின்றார்கள் என்ற எண்ணமும் கவலையும் ஏற்படுகின்றது. 

கேள்வி:- விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கும், தற்போதைய தீவிரவாத தரப்பினரின் தாக்குதல்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண்கின்றீர்களா?

பதில்:- விடுதலைப்புலிகள் மக்களை பகடைக்காய்களாக வைத்துக்கொண்டு தான் தாக்குதல்களை நடத்துவார்கள். இறுதியாக முள்ளிவாய்க்காலில் நான் அதனை நேரடியாகவே கண்டிருந்தேன். பொதுமக்களை முன்னால் செல்லவிட்டவாறு தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. 

ஆனாலும் கிழக்கு மாகாணத்திற்கு எனது தலைமையிலான அணி சென்றபோது நாங்கள் அவ்வாறான வாய்ப்பினை புலிகளுக்கு வழங்கியிருக்கவில்லை. அவர்கள் கிழக்கு மாகாண சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து தாக்குல்களை மேற்கொண்டார்கள். அதனை அறிந்த நாம் அவர்களின் பலம், பலவீனத்தினை அடையாளம் கண்டிருந்தோம். விடுதலைப்புலிகளுக்கு கிழக்கில் பங்கர் வெட்டுவதற்கு வாய்ப்பினை வழங்கியிருக்கவில்லை. கடலோரமாகவும் பாதுகாப்பினை வலுவாக்கினோம். இதனால் அவர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கியிருந்தோம். 

மேலும் விடுதலைப்புலிகளுக்கு தனிஈழக்கோரிக்கை இருந்தது. அவர்கள் அரச படைகள் மற்றும் அரசாங்க தரப்புக்கள், நிறுவனங்களையே அதிகமாக இலக்கு வைத்தார்கள். அவர்களின் நேரடியான இலக்கு பொதுமக்களாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய தாக்குதல்களின் பிரகாரம், தீவிரவாதிகள் பொதுமக்களையே பிரதான இலக்காக வைத்துள்ளனர். விடுதலைப்புலிகளை விடவும் இத்தீவிரவாதம் மிகமிக ஆபத்தானது. 

கேள்வி:- இந்த தாக்குதல்கள் குறித்து ஏப்ரல் 4 ஆம் திகதியே புலனாய்வுக் கட்டமைப்புக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் அதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போது கூறப்படுகின்றமை பற்றி?

பதில்:- முதலாவதாக புலனாய்வு தகவலொன்று கிடைக்கின்றது என்றால் அது வெறுமனே தகவல் என்ற அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பின்னர் அது மிகமுக்கியமான புலனாய்வு தகவலொன்று என்பது உறுதியாகின்றபோது அதனை புலனாய்வு கட்டமைப்பின் பிரதானியிடம் கையளிக்கப்படும். அந்த வகையில், புலனாய்வு தகவல் ஏற்கனவே கிடைத்ததாக நீங்கள் கண்டிருக்கும் ஆவணத்தினை பார்த்தீர்கள் என்றால், புலனாய்வுத்துறையின் பிரதானி, தனக்கு கிடைத்த தகவல்களை, ஏனைய பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு அறிவித்துள்ளார். 

அத்துடன் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் இந்த தகவல் நிச்சயமாக சென்றிருக்கும். ஆகவே பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பிரதானிகள் இதற்கான பொறுப்புக்கூறலை செய்யவேண்டும். 

தேசிய பாதுகாப்பு குறித்த முக்கிய தகவலொன்றை அவசரமாக ஏனைய கட்டமைப்புக்களுக்கு வழங்கியவுடன் புலனாய்வு கட்டமைப்பின் பணி நிறைவடைந்ததாக கருதிவிடமுடியாது. வழங்கப்பட்ட தகவலுக்கு என்ன நடந்தது? அதுகுறித்த  எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?, மேலதிக தகவல்கள் அவசியமாகின்றனவா? என்றெல்லாம் ஏனைய பாதுகாப்பு கட்டமைப்பின் பிரதிபலிப்புக்களை உடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான பிரதிபலிப்புக்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதுதான் இங்கு பிரதான பிரச்சினையாகின்றது. 

கேள்வி:- யுத்தம் நிறைவடைந்த பின்னர் புலனாய்வு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் தரப்புக்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்று கருதுகின்றீர்களா?

பதில்:- யுத்தகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு தகவல்களும் படைத்தரப்பின் புலனாய்வு கட்டமைப்பின் ஊடாகவே கையாளப்பட்டன. அத்துடன், படைத்தரப்பின் புலனாய்வு கட்டமைப்பே உயர் செயற்றிறன் கொண்டதாகவும் இக்கட்டமைப்பின் தகவல்களுக்கே அதீத முன்னுரிமைகளும் அளிக்கப்பட்டு வந்தன. அவ்வாறான நிலையில் இராணுவத்தளபதி இந்த விடயம் சம்பந்தமாக கூறிய கருத்துக்களிலிருந்து பார்க்கின்றபோது படைத்தரப்பின் புலனாய்வுக் கட்டமைப்புக்கான முக்கியத்துவம் தற்போது இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. 

தற்போது தேசிய புலனாய்வு கட்டமைப்பின் ஊடாக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இருப்பினும், அது எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதையும் படைத்தரப்பின் புலனாய்வு கட்டமைப்பின் நிலைமைகள் என்ன என்பதையும் நான் அறியவில்லை.  இருப்பினும், அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எங்கு தவறு இழைக்கப்பட்டது என்பதை தேடிப்பார்ப்பதில் பயனில்லை. ஆனாலும் எவ்வாறு இந்த விடயங்கள் நடந்தன என்பதை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  

கேள்வி:- யுத்தகாலத்தில் புலனாய்வு கட்டமைப்புக்களுக்கிடையில் காணப்பட்ட ஒருங்கிணைவு தற்போது அற்றுப்போயுள்ளதா? 

பதில்:- ஓய்வுநிலையில் உள்ளமையால் என்னால் உறுதியாக கூறமுடியாது. இருப்பினும் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான், சரத் பொன்சேகா, கரன்நாகொட, ரொஷான் குணதிலக்க, புலனாய்வு பிரதான, பொலிஸ்மா அதிபர் என அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், பாதுகாப்புச்சபை கூட்டம் நடைபெறும். அனைத்து விடயங்களையும் விவாதிப்போம். மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தாலும் மூடிய அறைக்குள் வாதவிவாதங்களாகவே இருக்கும். அதற்கு அப்பால் நாட்டிற்காக அர்ப்பணித்து பணியாற்றினோம். பாதுகாப்புச் சபையில் முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து தேசிய பாதுகாப்புச் சபைக்கு அதனைக் கொண்டு செல்வோம். அப்போதைய அரசியல்தலைவர்கள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம். நாம் ஒரு அணியாகவே செயற்படுவோம். அது என்றுமே மறக்க முடியாத காலம். 

கேள்வி:- நாட்டின், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தாக்குதல் சம்பவங்கள் குறித்த புலனாய்வுத் தகவல்களை அறிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம் என்கிறார்கள். பாதுகாப்புச் செயலாளர், சிறுசிறு சம்பவங்கள் நடைபெறும் என்றுதான் கருதியதாக கூறுகின்றார். பொலிஸ் மா அதிபர் உரியபதில் அளிப்பதாக இல்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இப்படியான நிலைமையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்று கருதுகின்றீர்கள்? 

பதில்:- முதலாவதாக நாட்டின் ஆட்சியாளர்கள், தமக்கு தெரியாது என்று கூறி வேறுநபர்கள் மீது கைகாட்டி விடமுடியாது. பொதுமக்கள் நாட்டின் ஆட்சிப்பொறுப்பினை அவர்களிடத்திலேயே ஒப்படைத்துள்ளார்கள். ஆகவே அவர்கள் அதிலிருந்து விலகிச் செல்லவே முடியாது. அவ்வாறான நிலையில் நீங்கள் கூறியதன் பிரகாரம் ஆட்சியாளர்களின் பதிலளிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அரச அதிகாரிகள். அவர்கள் தமது கடமைகள் தொடர்பில் அதீத தொழில்வாண்மை அறிவினைக் கொண்டிருக்க வேண்டும். ஹேமசிறி பெர்னாண்டோவை நண்பராக அறிந்துள்ள போதும் அவர் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் கொண்டிருக்கும் பின்னணிபற்றி எனக்கு தெரியாது. பொலிஸ் மா அதிபர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஒருவராக உள்ளார். 

அவ்வாறிருக்க, முப்பது வருடங்கள் யுத்தம் நடைபெற்ற நாடான இலங்கையில், பாதுகாப்புத்துறை சார்ந்து விசேட கல்வி, பயிற்சிநெறிகள், நேரடி அனுபவங்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த எத்தனையோ போர் உள்ளார்கள். உலகத்திலேயே அத்தகையவர்கள் சிறு அளவில் இருந்தாலும் இலங்கையில் பிறிதொரு நாட்டிற்கு பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு அறிவுரை வழங்ககூடிய அளவுக்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளார்கள். எனினும் பாதுகாப்புத்துறையின் உயர் பதவிகளுக்கு இத்தகையவர்கள் அனைவரும் புறந்தள்ளப்பட்டு தாம் அடையாளம் கண்டவர்களை ஆட்சியாளர்கள் நியமித்துள்ளார்கள். ஆகவே ஆட்சியாளர்கள் கண்ணாடியின் முன் நின்று பொறுப்பு யாருடையது என்று கேள்வி கேட்க வேண்டும். 

கேள்வி:- வெடிபொருட்கள் தொடர்பான விசேட நிபுணத்துவம் கொண்டிருக்கும் தாங்கள், தற்கொலை தாக்குதலில் எத்தகைய வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி கூறமுடியுமா? 

பதில்:- நான் விசாரணைகளில் நேரடியாக தொடர்புபடவில்லை. இருப்பினும் இஸ்ரேலில் பெற்ற பயிற்சியின் வெடிபொருட்களை கையாள்வது குறித்த விசேட அனுபவத்தின் அடிப்படையில் பதிலளிக்கின்றேன். விடுதலைப்புலிகள் ஏ.என்.எப்4 எனப்படும் அமோனியம் நைற்றேட்டையே பயன்படுத்தினார்கள். பின்னர் 4.எல்.ஓ, ரி.என்.ரி என்று தொடர்ந்ததோடு சி4 வரை சென்றார்கள். சி4 ஐ பிரதானமாக பயன்படுத்தினார்கள். இக்காலத்தில் படையினர் ஆர்.டி.எக்ஸ் ஐ பயன்படுத்தியது. ஆனால், தோளில் சுமக்கும் பையில் குண்டுகளைச் கொண்டு சென்றவர்களால் தான் கொச்சிக்கடை உள்ளிட்ட தேவாலயங்கள் பாரியளவில் தாக்கப்பட்டுள்ளன. 

இதனை வைத்துப்பார்க்கின்றபோது. அல்கொய்தா மற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் பயன்படுத்தும் அசிட்டோன் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட்  இரசாயன பதார்த்தங்களின் கலவையில் தயாரிக்கப்படும் ரி.ஏ.ரி.பி  எனப்படும் இரசாயனக் குண்டுகளையே பயன்படுத்தியுள்ளார்கள். இரசாயனப் பதார்த்தங்களை பவுடர்களாக கொண்டுவந்து குண்டுகளை இங்கு தயாரித்துள்ளார்கள். குறைந்த எடையில் அதிகளவு இழப்பினை, சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே சிந்தித்துள்ளார்கள். இதற்கு பாரிய நிதி வசதியும் தேவை. அதற்கான பின்னணியும் அவர்களுக்கு இருந்துள்ளது. ஆகவே இதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. 

கேள்வி:- தற்கொலை குண்டுகளுக்கான இரசாயனப் பதார்த்தங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா இல்லை வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமா? அவ்வாறு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்குமாயின் அதற்கு எவ்வாறான ஏதுநிலைகள் உள்ளன?

பதில்:- விமான நிலையத்தில் நவீன கருவிகள், பாதுகாப்பு கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. ஆகவே, அதன் ஊடாக இத்தகைய பொருட்களை நகர்த்துவது மிகவும் கடினமான காரியம். எனினும், எமது நாடு தீபகற்பமாகும். ஆகவே எம்மைச்சுற்றி கடற்பகுதியே இருக்கின்றது. இதன்மூலம் உலகத்தின் எப்பிரதேசத்தினையும் அடையமுடியும். ஆகவே எமது நாட்டில் கடலோர பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை கொள்ளப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, கடற்படை பாதுகாப்புக்குதான் முதன்மைத்தானம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எமது நாட்டின் கடற்படைக்கு அதிநவீன படகுகள், நவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் அவசியமாகின்றன. ரவி ஜயவர்த்தன பொறுப்பிலிருந்த காலத்தில் கடற்படையை பாரியளவில் கட்டமைப்பதற்கான திட்டங்களை வகுத்திருந்தார். அவற்றை படிப்படியாக முன்னெடுக்கவும் விழைந்தார். 

கேள்வி:- தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக எடுப்பதற்கு எத்தகைய ஆலோசனைகளை வழங்குகின்றீர்கள்?

பதில்:- விடுதலைப்புலிகள் அமைப்பில் மில்லர் முதலாவது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டார். அதன் அடுத்த தாக்குதலுக்கு கணிசமான இடைவெளி எடுத்தது. ஆனால், தற்போதைய நிலைமை அவ்வாறல்ல. ஒருமணிநேரத்திற்குள்ளே எட்டு தற்கொலை தாக்குதல். பழிவாங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் மிகவும் ஆபத்தானவை என்பதை ஆட்சியாளர்கள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகமே இந்த தாக்குதல்களின் கோரத்தினை உணர்ந்துள்ளது. 

தமிழ் கத்தோலிக்க மக்களே இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, தாக்குதல் குழுவின் இலக்கு ஏன் அவ்வாறு இருந்தது என்பதை உணரவேண்டும். தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதே அவர்களின் இலக்காக இருக்கும் என்றும் முஸ்லிம் சமூகத்தினை சுனி, சியா என இரண்டாகப் பிளவுபடுத்தும் பின்னணியும் இருக்கும் என்றும் நான் கருதுகின்றேன். 

ஆகவே முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இனவேறுபாடுகளை களைவதற்கு முன்வரவேண்டும். அத்துடன் ஆட்சியாளர்கள், துறைசார் நிபுணத்துவம் அனுபவம் மிக்கவர்களை அவர்களுக்குள்ள அரசியல் விருப்பு வெறுப்புக்களை வைத்து கணிக்காது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை மையப்படுத்தாது பாதுகாப்பு கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கே அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான உலக அனுபவங்களைப் பெறுவதோடு நான் கடமையில் இருந்தபோது அறிமுகப்படுத்துவதற்கு விளைந்தபோதும் தனிப்பட்ட நபர்களின் வெறுப்புக்களால் தடுக்கப்பட்ட புவியியல் தகவல் கட்டமைப்பினை உடனடியாக உள்வாங்க வேண்டும். இதனை அன்றே மேற்கொண்டிருந்தால் சங்கிரில்லாவுக்கு வரும் முன்பே குண்டுதாரிகளை அடையாளம் கண்டிருக்கலாம். மேலும், பயங்கரவாதம் தொடர்பான பாரிய அனுபவத்தினை படைத்தரப்பின் புலனாய்வு கட்டமைப்பு கொண்டுள்ளது. ஆகவே அக்கட்டமைப்பினை மறுசீரமைத்து மீண்டும் வலுவாக செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். நான் உள்ளிட்ட அதிகாரிகள் எமது நாட்டின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம். 

நேர்காணல் ஆர்.ராம்