கடந்த 35 நாட்களுக்குப் பின்னர், பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை நேற்று ஒரே நாளில் ஆறு கப்பல்கள் கடந்து சென்றன. இந்த அபூர்வ நிகழ்வை, பாம்பன் சாலை பாலத்தில் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - பாம்பன் இடையே கடலில் அமைந்துள்ள ரயில்வே தூக்கு பாலம், கப்பல்கள் கடந்து செல்வதற்காக வாரம் ஒருமுறை திறக்கப்பட்டது. இந்நிலையில், ‘105 ஆண்டுகளை கடந்த துாக்கு பாலத்தை அடிக்கடி திறந்து முடுவதால் பழுதாகிறது. எனவே, மாதம் ஒருமுறை மட்டும் திறக்க வேண்டும்’ என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி திறக்கப்பட்ட துாக்கு பாலம், அடுத்ததாக ஏப்ரல் மாதம் 21ம் தேதி திறக்கப்படலாம் என எதிர்பார்த்து, மும்பை செல்வதற்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து புறப்பட்ட ஐந்து இழுவை கப்பல்கள் கடந்த 10ம் தேதி பாம்பன் கடல் பகுதிக்கு வந்தன.

பின்னர், ரயில் பாலத்தை கடந்து செல்வதற்காக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் கப்பல்களின் கேப்டன்கள் மனு கொடுத்தனர். அதன்படி, நேற்று (26ம் திகதிதி) மதியம் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து இழுவை கப்பல்களும், விசாகப்பட்டினம் செல்லும், சரக்கு கப்பலும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.

ஒரே நாளில் அடுத்தடுத்து ஆறு கப்பல்கள் ரயில் பாலத்தை கடந்து சென்றது, போருக்கு அணிவகுத்து செல்லுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. கோடை விடுமுறையை கழிப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள், பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்களை கண்டு பரவசமடைந்தனர்.