கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்டவர்களின் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று அதிகளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடி பொருட்கள், டெட்டனேற்றர்கள், ட்ரோன் கமெரா ஆகியன இதில் அடங்கும் என இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அந்தக் காணொளியும் இந்த பகுதியில் வைத்து படமாக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரிகள் அணிந்திருந்த உடைகளும், பயங்கரவாத இலக்கத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட துணியும் மீட்கப்பட்டுள்ளது.

காணொளியின் பின்பகுதியில் காணப்பட்டதாக கருதப்படும் திரையை ஒத்த திரையொன்று கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் தற்கொலை குண்டுதாரிகளின் பிரதான பகுதியாக இந்த வீடு காணப்பட்டுள்ளது.

இதேவேளை பயங்கரவாதிகளின் வீட்டினை அதிரடிப் படையினர் முற்றுகையிட்ட போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 தற்கொலைதாரிகளின் உடல்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடும் சமரின் போது காயப்பட்ட இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இருவரையும் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.