(லியோ நிரோஷ தர்ஷன்)

கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அச்சப்பட்டு மக்களின் முன் நிர்வாணமாக நிற்க முடியாது என தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் , கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.  

இது  தொடர்பில் கூட்டு எதிர் கட்சியின் செயற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன கூறுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர் கட்சி உறுப்பினர்கள் இன்று  விஷேட சந்திப்பில் கலந்துக் கொண்டனர். 

குறிப்பாக எதிர்வரும் மே தின கூட்டம் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது. கூட்டு எதிர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பல்வேறு விடயங்களை தெரிவித்தனர்.

ஆனால் யாரும் காலி மே தின கூட்டத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவிக்க வில்லை . மாறாக ஏற்கனவே திட்டமிட்டது போன்று கிருளப்பனையில் மேதின கூட்டத்தை நடத்த இணக்கம் தெரிவித்தனர். காலியில் இடம்பெறுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  மே தின கூட்டமாக கருத முடியாது . ஏனெனில் தேசிய அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு மே தின கூட்டத்தை மாத்திரம் தனியாக வைப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் போக்கினையே கையாள்கின்றனர்.