பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தொலைபேசி மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இச்சந்தர்ப்பத்தில் சகோதர நாடு என்ற வகையில் மாலைத்தீவு இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாகவும் இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தெரிவித்தார்.

இந்த துன்பியல் சம்பவத்தில் பலியான அனைவரினதும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு கவலை தெரிவித்தமை தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, இந்த நாசகார பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை பாதுகாப்பு துறையின் பங்களிப்புடன் விரைவில் மேற்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.