12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரு  இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்துவதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.

2 தொடர் தோல்விகளுக்கு சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வென்று பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றதுடன் பிளேஒப் சுற்றுக்குள்ளும் நுழைந்துள்ளது.

அதே நேரத்தில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை, இறுதியாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று மூன்றாது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 4 ஆட்டங்களில் இரண்டில் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும். 

இந்த தொடரில் உள்ளூரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையோடு சென்னை சூப்பர் கிங்ஸ் பயணிக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவர்களது கோட்டையான வான்கடேவில் 37 ஓட்டங்களில் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொள்ளும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது.