(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட லொறியொன்று பிரவேசித்துள்ளதாக உளவுத்துறை தகவல்களை மையப்படுத்தி கடும் அச்சுருத்தலும் பதற்றமும் நிலவி வந்த நிலையில் இன்று அந்த லொறி கொட்டாஞ்சேனை பொலிசாரால்  வத்தளை - நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது. 

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தககுதகளின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் காசிம் சஹ்ரான் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் டப்ளியூ.பி. டி.ஏ.ஈ. 4197 எனும் இலக்கத்தை உடைய லொறியே இவ்வாறு இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டது.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நவகம்புர பகுதியில் வைத்து கொட்டாஞ்சேனை பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை தீவிர விசாரணைக்குட்படுத்திய போதே இந்த லொறி தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அதன்படி லொறியை வத்தளையில் வைத்து கைப்பற்றியதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

இந் நிலையில் அலுமினியத்தால் அமைக்கப்பட்ட அந்த லொறியின் பின் பகுதி உள்ளிட்ட   அனைத்து பகுதியிலும்  வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என தொடர்ச்சியாக பாதுகாப்புத் தரப்பினர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். 

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தககுதகளின் பிரதான சூத்திரதாரியான  மொஹம்மட் காசிம் சஹ்ரான், ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடத்திய முக்கிய குண்டுதாரியாவார். 

இதனிடையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய முகத்துவாரம் பகுதியில் இன்று மாலை வேன் ஒன்றில் பயணித்த மூவரைக் கைது செய்தனர். ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியானா இன்சானுடன் நெருக்கமான ஒருவர் உள்ளிட்ட மூவரையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இவ்வாறு கைது செய்தனர்.

இந் நிலையில் அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் , மறைத்து வைக்கப்பட்டிருந்த  21 உள் நாட்டு தயாரிப்பு இலகு ரக சிரிய குண்டுகளும் 6 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். 

தொடர்ந்து குறித்த மூன்று சந்தேக நபர்களிடமும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை  முன்னெடுத்துள்ளது. 

இதனிடையே நடததப்பட்ட  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, குண்டுப் புரளிகளால் பொது மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் இன்றும் பல பகுதிகள் இந்த பதற்றம் மற்றும் அச்ச சூழல் நிலவியது.

பூகொடை வெடிப்பு

பூகொடை பகுதியில், பூகொடை  நீதிமன்றுக்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவானது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

எனினும் இந்த குண்டு வெடிப்பால் எவருக்கும்  எந்த காயங்களோ சொத்து சேதங்களோ ஏற்படவில்லை.  இந்த குண்டு வெடிப்பானது பயங்கரவாத செயலுடன் தொடர்பற்றது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிச் மா அதிபர் தென்னகோன் தெரிவித்தார்.

சிரிய ரக கிரனைட் ஒன்றே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இது பிரதேசத்தின் முஸ்லிம் - சிங்கள மக்களிடையேயான உறவை குழப்ப எடுக்கப்பட்ட முயற்சியாக தான் சந்தேகிப்பதாகவு அவர் கூறினார்.

விமான நிலைய பதற்றம் 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்பாக உள்ள வீதி இன்று முற்பகல் திடீரென தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் கட்டுநாயக்க பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் விமான நிலைய பகுதியில் பதற்றம் நிலவியது. 

விமான நிலைய வெளிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் குறித்த வீதி மூடப்பட்டதாக, விமானப்படை தெரிவித்தது. 

இதனால் சில மணித்தியாலங்கள், விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, வெளி நாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகளுக்கும் தாமதம் ஏற்பட்டது.  விமானப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்காதமையால் விமான நிலையம், பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

சீதுவையில் சிக்கிய மோட்டர சைக்கிள்கள்

சந்தேகத்துக்குடமான மோட்டார் சைக்கிள்கள் இரண்டு இன்று சீதுவையில் வைத்து  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சீதுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்போது இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலக்கங்களை உடைய இரு மோட்டார் சைக்கிள்களே கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார். 

பதுளையில்  தேடுதல்

பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பதுளை பொது வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஆகியன சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லை பதற்றம்

மாவனெல்லை நகரில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்குடமான மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அங்கு இன்று முற்பகல் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஸ்தலத்துக்கு விரைந்த  இராணுவத்தினரும் பொலிசாரும் நிலைமையைக் கட்டுப்படடுக்குள் கொண்டுவந்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எந்த வெடிபொருட்களும் மீட்கப்படவில்லை. 

குருணாகல் நகர் முழுவதும் சோதனை:

அவசரகால சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி குருணாகல் நகர் முழுதும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. குருநாகல் பஸ் நிலையத்திலிருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிசார் கூறினர். 

அதன் பின்னர் நகரின் ஏனைய பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது எவ்வித சந்தேகத்துக்கு இடமான பொதிகள் பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிசார் கூறினர். 

மட்டக்களப்பில் பதற்றம்  

மட்டக்களப்பு நகரிலுள்ள கொமர்ஷல் வங்கி வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தமையை அடுத்து, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் அங்கு அச்ச நிலை ஏற்பட்டபோதும்,  அங்கும் எந்த வெடி பொருளும் கைப்பற்றப்படவில்லை. 

பலாங்கொடையில் சிக்கிய லொறியும்  விஷேட சோதனைகளும் 

பலாங்கொடை பகுதியில் பாராளுமன்ற வீதி அமைப்புப் படத்துடன், காலாவதியான பாராளுமன்ற நுழைவு அட்டைகளுடனும் சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர். 

அத்துடன் பாதுகாப்பின் நிமித்தம் பலாங்கொட நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற கட்டட வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் மீட்கப்பட்ட டெட்டனேட்டர்

நுவரெலியா ஹவா எலிய பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாரால் இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 

ஹாவா எலிய பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்தே இவ்வாரு  டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பின் பதற்றமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்

கொழும்பு – கோட்டை பகுதியில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன அமைந்துள்ள பகுதிகளிலுள்ள வீதிகளில் பாரவூர்திகள் பயணிப்பது மட்டுப்படுத்தப்பட்டதுடன் மத்திய வங்கி அமைந்துள்ள பகுதியிலும் கடும் பாதுகபபு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

கோட்டை பகுதியில் உள்ள பல வீதிகளில் ஒருவேளை போக்குவரத்து மட்டுமே இதன்போது அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அலுவலகங்கள்,  நிறுவனங்கள் பலவற்றில் இருந்த ஊழியர்கள் பகல் வேளையில்  வெளியே செல்ல வேண்டாம் என நிர்வாக தரப்பினரால் பணிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மாலை வேளையிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ,முன்பாகவே அரச ஊழியர்களும் ஏனைய பணியாளர்களும் பணிகளை முடித்துவிட்டு வெறியேறினர்.

இதனிடையே, கொழும்பு றிட்ஜ்வே  சிறுவர் போதனா வைத்தியசாலையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

கிடைத்த தகவலுக்கமைய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். இதன் காரணமாக, சிகிச்சை பெற வரும் நோயார்களுக்கும் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அநாவசியமான அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியமில்லை என பொலிச் பேச்சாளர் பொலிச் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறினார். 

நாட்டின் பல பகுதிகளில் வீதி தடை ஏற்படுத்தப்பட்டு வாகனங்களும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சளார், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியதுடன், பொலிஸாருக்கு கிடைக்கும் தகவலின்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தமைன் குறிப்பிடத்தக்கது.