மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன்  தொடர்புப்பட்ட சஹரான் மெளலவியின்  உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று  கைதுசெய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த தற்கொலைதாரி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக வெள்ளவத்தையிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வதற்காக தனியார் பஸ்ஸில் கடந்த 20 ஆம் திகதி இரவு 9 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் பொதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார். 

அதன் பின் குறித்த பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்கு அருகில் 21 ஆம் திகதி அதிகாலை 2. 17 மணிக்கு இறங்கி ஆட்டோ ஒன்றில் நகரப்பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு 2.35 மணியளவில் சென்று பின் பள்ளிவாசல்  பூட்டியிருந்ததால் அங்கு கதவுக்கு அருகில் படுத்துள்ளார்.

அதன் பின்னர் 4.15 சுபோ தொழுகைக்காக பள்ளி வாசல் மெளலவி பள்ளிவாசலை திறந்ததும் அங்கு சென்று குளித்து ஆடை அணிந்து கொண்டு தொழுத பின்னர் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8.34 மணிக்கு அங்கிருந்து குண்டு பொதியுடன் வெளியேறி மட்டு தலைமையக தபாற்கந்தோருக்கு அருகில் நடந்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வல்லோன் (ஆதராவீதி) வழியாக மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலய முன் பகுதிக்கு 8.45 மணிக்கு வந்தடைந்து அதற்கு முன்னால் எதிரே உள்ள மரம் ஒன்றின் அருகில் மதில் பகுதியில் குண்டு பொதியுடன் இருந்து களைப்பாறியுள்ளார்.

மீண்டும் அங்கிருந்து 8. 54 மணிக்கு எழுந்து தேவாலயப் பகுதிக்கு சென்று வாகன தரிப்பிடத்தில் ஜெயக்கொடி என்பவரிடம் தேவாலய ஆராதனை எத்தனை மணிக்கு முடியும் என  வினாவிய பின்னர் ஆலயத்திற்குள் சென்று முஸ்லீம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற வந்திருப்பதாக தெரிவித்ததையடுத்து மதம் மாற்ற ஞானஸ்தானம் செய்ய வேண்டும் என தண்ணீர் தெளிப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்கு அங்கிருந்த ஒருவர் சென்றுள்ளார்.

அதன் பின்னர் 9.03 மணிக்கு தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சி.சி.ரிவி. கேமராவின் உதவியுடன் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த தற்கொலைதாரி  பயணம் செய்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மற்றும் பஸ்சுக்கு ஆசனப்பதிவு செய்தவர் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 

சஹரான் மௌலவியின்  மாமியார், மாமனர் மற்றும் அவரது தங்கை உட்பட 3 பேரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தற்கொலைதாரி அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த  அதிகாரி தெரிவித்தார். 

இதேவேளை இது தொடர்பான   விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.