மட்டக்களப்பு பிரதான நகரிலுள்ள தனியார் வங்கி மற்றும் உள்ளூராட்சிமன்றம் ஆகியவற்றில், மர்மப்பொருள்கள் இருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மட்டக்களப்பு நகரூடாகச் செல்கின்ற அரசடி வீதி,  தற்காலிகமாக இன்று வியாழக்கிழமை முற்பகல் வேளையில், மூடப்பட்டு அப்பகுதியில் சோனை  நடவடிக்கைகளை மேற்கொண்ட படைத்தரப்பினர் அங்கிருந்து எதுவித மர்மப் பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

இதனால் இன்று வியாழக்கிழமை (25) முற்பகல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினூடாகவே, மட்டக்களப்பு நகருக்குச் சொல்லும் போக்குவரத்துக்கள் சிறிது நேரம் இடம்பெற்றன. குறித்த சம்பவத்தால் மட்டக்களப்பில் சற்றுப் பதற்றமான சூழலொன்று காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. 

கடந்த உயிர்த்த நாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து மட்டக்களப்பு தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஒருவித பீதி இருந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தும், 69 பேர் காயப்பட்டும் இருந்தனர்.

இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலன இடங்களில் இராணுவத்தினர், பொலிஸார், மற்றும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதையும், சந்தேகத்திற்கிடமாகச் செல்லும் வாகனங்களையும், சோதனையிட்டு வருவதையும், காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு நகருக்குள் உள்நுளையும், கல்லடி பாலத்ததருகிலும், ஊறணிப் பகுதியிலும், பிரதான வீதியருகில் வீதி மறியல் கோபுங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்,  அவ்விடங்களிலும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டு வருகின்றன. எது எவ்வாறு அமைந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரசேங்களுக்குள் பிரவேசித்து  சந்தேகத்தின் பேரில் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு மக்களின் மனத்தில ஒரு மனக் கிலசத்தை உண்டு பண்ணியுள்ளதாகவும், அதுவும் வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது வைத்து குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பாராது மேற்கொண்ட கண்மூடித்தனதான தாக்குதலை மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் மூடப்பட்டிருந்த தமிழ் பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நேற்று புதன்கிழமை (24) திறக்கப்பட்டதுடன் முஸ்லிம் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை (25) திறக்கப்பட்டு வழமைக்குத் திரும்பியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.