(ஸ்டான்லி ஜொனி)

கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை  இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப் பதிலடியாகவே ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று 350 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

சர்வதேச இயக்கத் தொடர்புகளிடமிருந்து கிடைத்திருக்கூடிய உதவியுடன் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமே தாக்குதல்களை மேற்கொண்டதாக விசாரணையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்பென்று இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) இயக்கம் அதன் அமாக் செய்திச்சேவையின் ஊடாக உரிமை கோரியிருப்பதுடன், புகைப்படமொன்றையும் வெளியிட்டு அதில் காணப்படுபவர்களே குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று கூறியிருப்பதாக சில செய்திகள் கூறுகின்றன.

க்ரைஸ்ட் சர்ச் கொலைகளுக்குப் பின்னரான ஒரு மாதத்திற்கும் சற்றுக் கூடுதலான காலத்திற்குள் இந்தத் தாக்குதல்களை இலங்கைத் தற்கொலைக் குண்டுதாரிகள் திட்டமிட்டு நடத்தி முடித்தார்களா அல்லது இத்தகைய தாக்குதல்களை நடத்துவதற்கு நீண்டகாலமாகவே திட்டமிட்டுக் கொண்டிருந்த நிலையில், பிறகு க்ரைஸ்ட் சர்ச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உண்மையான காரணம் எதுவாக இருந்தாலும் இலங்கை இந்தத் தாக்குதல்களுக்காக ஏன் தெரிவு செய்யப்பட்டது என்பது நல்லறிவிற்கு அகப்படுவதாக இல்லை.

இஸ்லாமிய அரசின் மத்தி – புற எல்லை செயற்பாட்டுமுறை

க்ரைஸ்ட் சர்ச் துப்பாக்கித் தாக்குதலுடன் இலங்கைக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. முஸ்லிம் உலகில் மேற்குலகம் நடத்துகின்ற போர்களில் இலங்கை எந்தவிதமான பங்கை வகிக்கவும் இல்லை. மேற்குலக நாடுகளில் குடிமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு சாட்டாக இஸ்லாமிய அரசு இயக்கம் முஸ்லிம் உலகில் மேற்குலக நாடுகள் நடத்துகின்ற இந்தப் போர்களையே கூறிவந்திருக்கிறது. ஆனால் இந்த முழு விவகாரத்தையும் இஸ்லாமிய அரசு அவ்வாறாகப் பார்க்கவில்லை.

முதலில் நியூஸிலாந்தில் பலியானவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் இஸ்லாமிய அரசு இயக்கம் உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கவில்லை. ஆனால் க்ரைஸ்ட் சர்ச் கொலைகளை அந்த இயக்கம் இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதலாகவே பார்க்கின்றது. அத்துடன் அவர்கள் தங்களை இஸ்லாம் மதத்தின் மீது  உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் என்றும், இஸ்லாத்தைப் பாதுகாப்பவர்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர். 

அவர்களைப் பொறுத்தவரை க்ரைஸ்ட் சர்ச் தாக்குதல் தனியொரு வெள்ளையினப் பயங்கரவாதியினால் நடத்தப்பட்டதாக அவர்கள் நோக்கவில்லை. மாறாக கிறிஸ்தவர்களினால் (இஸ்லாமிய அரசின் பிரசுரங்களில் கிறிஸ்தவர்கள் சிலுவைப்போர்காரர்கள் அல்லது ரோமானியர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றார்கள்) நடத்தப்பட்டதாகவே எண்ணுகிறார்கள். எனவே அதற்கான பழிவாங்கல் உலகின் எந்தப் பகுதியிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படலாம்.

இரண்டாவதாக இஸ்லாமிய அரசு இயக்கம் 'மத்தி – புற எல்லை" என்ற பாணியின் ஊடாகவே செயற்பட்டது. சிரியாவிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் இயங்கிய இஸ்லாமிய அரசு இயக்கத்தின் இராச்சியமே மத்தி என்று கூறப்படுவதாகும். உலகின் ஏனைய பகுதிகளில் அந்த இயக்கத்திற்கு படையினரைத் திரட்டக் கூடியதாகவும், தாக்குதல்களை நடத்தக் கூடியதாகவும் இருக்கும் பகுதிகளே புற எல்லை என்று கூறப்படுவதாகும். மத்தி தாக்குதலுக்கு உள்ளான போது இஸ்லாமிய அரசு இயக்கம் புற எல்லை மீது கவனத்தைத் திருப்பியது. உலகின் பல்வேறு பாகங்களில் (நேரடியாகவும், தூண்டிவிட்டும்) பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டது.  ஓக்லண்டோ இரவு விடுதித் தாக்குதல் தொடக்கம் டாக்காவிலுள்ள ஹோலி ஆர்ட்டிசன் பேக்கரியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வரையான சம்பவங்களை இவ்வாறுதான் நோக்க வேண்டும்.

இஸ்லாமிய அரசு இயக்கத்தின் மத்தி இப்போது அழிக்கப்பட்டுவிட்டது. இதற்குப் பிரதான காரணம் சிரியாவிலுள்ள குர்திஸ் போராளிகளும், ஈராக் இராணுவமும், அங்குள்ள சியா விரட்டல் படைகளுமே ஆகும். தலைவர் அபூ பக்கர் அல் - பக்தாதி ஆட்சி செய்து வந்துள்ள சகல பிராந்தியங்களையும் இஸ்லாமிய அரசு இழந்துவிட்டது. ஆனால் அதன் ஒழுங்குக் கட்டமைப்பு மாத்திரமே நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றது. அதன் தத்துவார்த்த சாதனம் உள்ளபடியே இருக்கிறது.

தாங்கள் மனதில் கொண்டுள்ள தூய்மையான இஸ்லாமிய கருத்துருவத்திற்கும், ஏனைய கலாசாரங்களுக்கும் இடையேயான நிரந்தர முரண் நிலையே இஸ்லாமிய அரசின் உலகப் பார்வையாக இருக்கின்றது. இந்தப் பார்வையே இளம் ஜிகாதிகளை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய அரசின் இராச்சியம் வீழ்ச்சியடைந்த போதிலும் அதன் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். மத்தி என்று கூறப்பட்டதன் இடிந்தழிந்து போன கொத்தளங்களுக்கும், புற எல்லைகளில் இருக்கக்கூடிய போராளிகளுக்கும் இடையே தொடர்பு முறையொன்று இருக்கிறது என்பது வெளிப்படையானது.

உலகின் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத்தைப் பரப்பி இஸ்லாத்திற்கும், ஏனைய மதங்களுக்கும் இடையிலான கலாசாரப் போரொன்றை மூள வைப்பதே அவர்களது இலக்காகும். இந்தத் தடவை அது இலங்கையில் நடந்திருக்கிறது. அடுத்த தடைவ உலகின் வேறெந்தப் பகுதியிலும் நடக்கலாம்.

(நன்றி - 'த இந்து" ஆங்கிலம்)