தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்குபற்றினர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“பா.ஜ.க.வும், பா.ம.க.வும் அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன. பா.ஜ.க.விடமிருந்து அப்பாவி இந்துக்களையும், பா.ம.க.விடமிருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். நடுநிலையாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மானத்திற்காக வாழ்பவன் தான் நான்.  ஆனால் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பணத்திற்காகவும், பதவிக்காகவும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். வன்னியர்களின் எதிரியான பா.ம.க.வுக்கு தென் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளதா? அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்காக அரசியலை விட்டு விலகத் தயார்.எமக்குத் தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பு அது தவிர வேறு ஒன்றுமில்லை . அவர்களின் பாதுகாப்புக்காக அரசியல் வாழ்க்கையை விடவும் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

இதைத்தொடர்ந்து திருமாவளவனின் இந்த ஆவேச பேச்சிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது,

“திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடி என வன்முறை அரசியலுக்கு வழிகாட்டும் திருமாவளவனிடமிருந்து அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நீங்கள், அடித்தட்டு மக்களுக்காக கொண்டு வந்த ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா...? பா.ஜ.க.வை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய டுவிட்டர் பதிவில்,

“சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரரான திருமாவளவன் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார். சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் திருமாவளவன்.” என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.