இலங்கையின் தௌஹீத் ஜமாத் அமைப்பு தமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பொன்றுடனும் கேரளாவை சேர்ந்த சிலருடனும் இணைந்து தனியான இஸ்லாமிய கூட்டமைப்பை  இந்து சமுத்திர பிராந்தியத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்ததாக  இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களிற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள அந்த அதிகாரி ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன்  தொடர்பிருந்தது. இது குறித்து விசாரணை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் தளங்களை உருவாக்கும் முயற்சிகளிற்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களுடன் பங்களாதேசை சேர்ந்தவர்களிற்கு உள்ள தொடர்புகுறித்தும் இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொண்ட பலர் இலங்கைக்கு சென்று அங்கு தீவிர இஸ்லாமிய போதனைக்கு தங்களை உட்படுத்திய பின்னர் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள  நன்கஹர் பகுதிக்கு சென்றனர் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.