ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வட கொரிய ஜனாதிபதி ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் நகரை நேற்று புதன்கிழமை சென்றடைந்தார்.

மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவரது பயணத் திட்டம் குறித்த தகவலை, அவர் பிரத்யேக ரயில் மூலம் ரஷ்யா புறப்படுவதற்கு முன்னர் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அந்த ரயிலில் கிம் யொங்-உன்னுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ரீ யாங்-ஹோ உள்ளிட்ட குழுவினர் ரஷ்யா சென்றதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கிடையே, டியூமென் நதியைக் கடந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த கிம் யொங்-உன்னின் பிரத்யேக ரயில், எல்லை நகரான காசனில் நிறுத்தப்பட்டு, அங்கு கிம் யொங்-உன்னுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, விளாதிவோஸ்டாக் நகரை வந்தடைந்த கிம் யொங் உன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதன்போது இந்த ரஷ்ய சுற்றுப் பயணம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெறும் என்று நம்புவதாகவும் புடீனுடனான பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவது, வட கொரியா - ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு தமக்கானஆதரவை சர்வதேச அளவில் விரிவுபடுத்த கிம் யொங்-உன் விரும்புவதையும், அமெரிக்காவுடனான மோதலுக்கான இன்னொரு களத்தை உருவாக்க புட்டின் தயாராவதையும் இந்தச் சந்திப்பு உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.