(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐ,எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் அன்று பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவிக்காமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார் என முஜிபுர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஐஎஸ். அமைப்பை முஸ்லிம்கள் ஒருபோதும் இஸ்லாமிய அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைப்பு உருவாகி மனித படுகொலைகளை மேற்கொள்ள ஆரம்பித்த காலப்பகுதியிலே அதனை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நிராகரித்துடன் அவர்களின் செயற்பாடுகளையும் கண்டித்திருந்தது. 

குறிப்பாக தற்போது கதைக்கப்படும் தேசிய தெளஹீத் அமைப்பு தொடர்பாகவும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜம்இய்யதுல் உலமாசபை, முஸ்லிம் சிவில் அமைப்புகள் என பலர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்திருக்கின்றன.

அதேபோன்று கடந்த வருடம் திகனையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்தின் பின்னர் குறித்த அமைப்பின் தலைவராக தெரிவிக்கப்படும் சஹ்ரான் என்பவர் காத்தன்குடி பள்ளிவாயலில் நடத்திய பேச்சில் வைராக்கியத்தை தூண்டும் வார்த்தைகள் இருந்தன. அந்த பேச்சு அடங்கிய இறுவட்டை பொலிஸுக்கு ஒப்படைத்து அவரை விசாரிக்குமாறு தெரிவித்திருந்தோம்.

அத்துடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற பாதுகாப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றபோது அதில் நானும் கலந்துகொண்டு அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடம், நாங்கள் சஹ்ரான் தொடர்பில் கையளித்த இறுவட்டு குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என கேட்டேன். சுமந்திரன் எம்.பியும் கேட்டார். ஆனால் அவர்களிடமிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.

அதேபோன்று இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறப்போவதாக புலனாய்வு துறையில் இருந்து தகவல் கிடைத்த பின்பும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தது. என்றாலும் அதுதொடர்பில் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கை எடுக்க யார் தடையாக இருந்தார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும். ஏனெனில் இதன் பிரதிவாதிகளாக இன்று முஸ்லிம் சமூகம் முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. அதனால் இன்று முஸ்லிம் சமுகம் வைராக்கியமாக பார்க்கப்படுகின்றார்கள் என்றார்.