‘மே மாதம் முதல் திகதியன்று வெளியாகவிருக்கும் கௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை’ என்கிறார் இயக்குனர் முத்தையா.

இது குறித்து இயக்குனர் முத்தையா தொடர்ந்து பேசுகையில்,“ படத்தின் தலைப்புதான் தேவராட்டம். இது ஒரு சாதியை மையப்படுத்திய படமல்ல. தேவராட்டம் என்பது ஒரு கலை. வெற்றி பெறும்போது வெற்றி பெற்றவர்கள் ஆடும் ஆட்டம். இந்த படத்தில் கதையின் நாயகன் கௌதம் கார்த்திக் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வெற்றி. 

அவருக்கும், அவருடைய மூத்த சகோதரிக்கு இடையேயான உறவை இந்தப் படம் பேசுகிறது. எம்முடைய படங்களில் தாய் =மகன் உறவு, மாமனார் =மருமகன் உறவு, பாட்டி= பேரன் உறவு, அண்ணன் =தங்கை உறவு என உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான், குட்டி புலி, கொம்பன், மருது, கொடி வீரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறேன். 

அந்த வரிசையில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையேயான உறவை தான் தேவராட்டம் படத்தில் மையப்படுத்தி இருக்கிறேன். இதனை கொமர்ஷல் அம்சங்களுடன் இணைந்து வழங்கி இருக்கிறேன்.” என்றார்.

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, சரவண சக்தி, ரகு, எழுத்தாளர் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படம் மே முதல் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.