(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட வேன் ஒன்றும், சிறிய ரக லொறியொன்றும் பிரவேசித்துள்ளதாக இன்று உளவுத்துறை பாதுகாப்புத் தரப்பை எச்சரித்த நிலையில், தலைநகர் எங்கும் பதற்றத்துடன் காணப்பட்டது.

உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க ஊடாக கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு, விபரீதம் ஒன்று ஏறபடுவதை தடுக்க பிற்பகல் முதல் விஷேட சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.  

எனினும் இன்று மாலை வரை உளவுத்துறை குறிப்பிட்ட இரு வாகங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந் நிலையில் அது குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில், துறைமுக வளாகத்துக்குள்ளும் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுருத்தலுக்கு அமைய தீவிர தேடுதல்கள் இடம்பெற்றன.

தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் பதிவான தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய 5 மோட்டார் சைக்கிள்கள் ஒரு கெப் ரக வாகனம் மற்றும் மேற்படி வேன், லொறி ஆகியவற்றை தேடுவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறினார். 

இது தொடர்பில் அவ் வந்த வாகங்களின் பதிவிலக்கம் முதல் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய விபரங்களை பொலிஸ் மா அதிபர்  நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளதாகவும்,  நாடளாவிய ரீதியில் அவற்றை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று மாலையாகும் போது, இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளுக்காக சுமார் 60 பேர் வரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

குறிப்பாக குற்றப் புலனயவுப் பிரிவினரால் 26 பேரும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மூன்று பேரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து பயங்கரவாத தடை சட்ட விதி முறைகளுக்கு அமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் நாட்டில் பல்வேரு பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை வழங்கியிருந்த தகவலில், துறைமுகத்துக்குள் தாக்குதல் நடத்த அலுமினியம் தகடினால் அமைக்கப்பட்ட மேல் பகுதியைக் கொண்ட சிறிய ரக லொறியொன்றும், வேன் ஒன்றும் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் முதலில் இது குறித்து துறைமுக பொலிசார் ஊடாக துறைமுக அதிகார சபை உள்ளிட்ட துறைமுகத்தில் சேவை செய்வோருக்கு அறிவிக்கப்பட்டு, துறைமுகத்துக்குள் உள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டன. அத்துடன் துறைமுக வளாகத்துக்குள் இருந்த வாகங்களும் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினரின்  சோதனைக்கு உள்ளக்கப்பட்டது.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்துக்குட்பட்ட கொழும்பு ஒன்று முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் இந்த லொறியையும் வேனையும் தேடி விஷேட தேடுதல்கள் இரவு நேரம் வரை நடத்தப்பட்டது. இதனால் கொழும்பு வாழ் மக்களிடையே பெரும் பதற்றம் நிலவியது.

பிற்பகல் இந்த தகவல் பரவியதால்,  அரச அலுவலகங்கள் பலவற்றிலும் வங்கிகளிலும் சேவை செய்யும் ஊழிஅயர்கள் நேர காலத்துடன் கடைமைகளை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.

இந் நிலையில் பிற்பகல் நிலைமைகளை ஆராய்ந்த பொலிசார் இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கினை பிறப்பித்தனர்.

வதந்திகளால் பதற்றம்:

இதேநேரம் தலை நகரின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரவிவரும் வதந்திகள், குண்டு புரளிகளால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புரளிகளை கிளப்புவோருக்கு எதிராக சர்வதேச அரசியல் சிவில் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர எச்சரித்தார். 

புரளி கிளப்பிய இருவர் கைது:

குடிநீரில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை நேற்று பரப்பிய இருவர் புளூமெண்டல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குண்டு புரளிகள்:

இன்று சுமார் மூன்று இடங்களில் குண்டு புரளியால் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுபிட்டி ரயில் நிலையத்தில் இருந்த பொதி ஒன்றினால் அங்கு குண்டு இருப்பதாக தகவல் பரவியது. சந்தேகத்துக்கு இடமான அந்த பொதி தொடர்பில் இதன்போது, பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கப்பட்டது.

தகவலறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அந்த பொதி தொடர்பில் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அந்த பொதியில் சிரட்டைகள் அடங்கிய குப்பைகளே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பம்பலபிட்டி பகுதியிலும் பாதை ஓரமாக ஈயத் தாளில் சுற்றப்பட்டிருந்த பொதியால் அங்கு குண்டுப் பயம் ஏற்பட்டது.

இதனால் அப் பகுதியிலிருந்து மக்கள் உடனடியாக அகற்றப்பட்டு, பொலிசாரும் அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரும் குறித்த பொதியை உரிய பாதுகாப்பு செயன்முறையுடன் சோதனையிட்டனர். இதன்போது  ஒரு கொங்றீட் கல் மீட்கப்பட்டது.

இந் நிலையில் இவ்வாறான கேலிக் கூத்து செயற்பாடுகளில் எவறும் ஈடுபட வேண்டாம் எனவும், அதனால் பாதுகாப்புத் தரப்பினரை  திசைத் திருப்புவதாக அந் நடவடிக்கைகள் அமையும் எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  பொது மக்களிடம்  கேட்டுக்கொண்டார்.

அத்துடன் கொம்பனித்தெரு நவம் மாவத்தை தனியார் வங்கியொன்றுக்கு அருகில் குண்டு அடங்கிய பொதிகள் இருப்பதாக  வெளிப்படுத்தப்பட்ட தகவல்களாலும் அங்கு பதற்றம் நிலவியது.  எனினும் அங்கும்  பொதியில் இருந்து எந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்படவில்லை. 

மேலும் கோட்டை கிங்ஸ்பெரி  நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும் பாதுகாப்பு தரப்பினர் அந்த மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்ததன் பின்னர்  அதில் வெடிபொருட்கள் இருக்கவில்லை என்பது உறுதியானது.

அம்பாறை பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றினால்  பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்த மோட்டார் சைக்கிளிலும் எந்த வெடிபொருளும் இருக்கவில்லை.

குளியாபிட்டி வைத்திய சாலை அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜரோ ஜீப் ஒன்று தொடர்பில் பதற்றம் ஏற்பட்டது. மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  ஜீப் வண்டியினால் இந்த பதற்றம் ஏற்பட்டது. எனினும் ஜீப் இன் சாரதி மாலை நேரம் வந்தை அடுத்து அவரையும் ஜீப்பையும் பொலிசார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அதுவரை அந்த ஜீப் அருகே எவரையும் செல்ல விடாது பொலிசார் விஷேட பாதுகபபு விதிமுறைகளையும் முன்னெடுத்திருந்தனர்.