(நா.தினுஷா)

நாடு எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எதிர்கால முரண்பாடுகளை தவிர்த்துக்கொண்டு அதிகாரங்களை உருப்படியான முறையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என்று மின்வலு,எரிசக்தி, தொழில்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான லலித் அத்துலத் முதலியாரின் 25 வது நினைவுத்தின நிகழ்வில் கலந்துக்கொண்ட கருணாநாயக்க ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் படிப்பினையை பெற்றுக்கொண்டு நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதற்கான அவசியமும் காணப்படுகிறது.

உலக முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த முடியாதவையாகவும் உருவெடுத்துள்ளன. எனவே இவ்வாறான தாக்கதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனத்துடன் செயற்படுவதே முக்கியமானதாகும்.

மேலும் தொடர் குண்டுதாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் முறையாக செயற்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளை முடிந்தளவு கட்;டுபாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும். பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றை தீர்த்துக்கொண்டு முரண்பாடுகள் இல்லாமல் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது எனத் தெரிவித்தார்.